இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் ஒன்று மதுருஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, விபத்துக்கான காரணத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு, தெஹியத்தகண்டிய பதில் நீதவான், பொலிஸாருக்கும் விமானப்படைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் இதன்போது உத்தரவிட்டதாக, ‘அத தெரண’ நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி, மதுருஓயா இலங்கை இராணுவத்தின் விசேட படைகள் முகாமில் நடைபெற்ற விழாவுடன் இணைந்து சாகச பயணத்தில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர், மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
தெஹியத்தகண்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்து நடந்த இடத்தையும் உள்ளடக்கிய நீர்ப்பரப்பை, பதில் நீதவான் யூ. ராஜபக்ஷ ஆய்வு செய்துள்ளார்.
விபத்து தொடர்பாக, விமானப்படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் விமானப்படையும், பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
பொலிஸாரின் இந்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட தெஹியத்தகண்டிய பதில் நீதவான் யூ. ராஜபக்ஷ, விபத்து தொடர்பாக தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு, விபத்துக்கான காரணத்தை நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கும் விமானப்படைக்கும் உத்தரவிட்டார்.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதவான் பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.