இலங்கையில் முதலீடுசெய்வதற்கு கட்டார் ஆர்வம் காட்டுவதுடன் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கட்டார் நாட்டுக்கான ஜனாதிபதியின் விஜயம் பெருவாரியாக வெற்றியடைந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டம் தொடர்பிலும் பெருவரவேற்பு கிடைத்தது.
எனவே கட்டார், இலங்கையுடன் பொருளாதார ரீதியிலான உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஆகவே எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுசெய்வதற்கும் விருப்பம் காட்டுகிறது.
ஆதலால் அந்நாட்டுடன் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான உறவுகளை வளர்த்துக்கொள்ள முடியும். குறித்த விஜயத்தின்போது அந்நாட்டுடன் ஏழு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.