இந்த சுந்தர அந்திப் பொழுதில் கட்டார் நாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களான உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நாட்டில் பல்வேறு துறைகளில் தொழில் வல்லுனர்களாகவும் வியாபாரத்துறையிலும் ஏனைய துறைகளிலும் சேவை செய்து எமது தாய்நாட்டின் கௌரவத்தை காப்பதற்காக பாடுபட்டுவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன். உங்களது தொழில்களில் பல்வேறு கஷ்டங்கள் இருப்பதை நான் அறிவேன். அதேபோன்று இன்னும் சில துறைகளில் வசதி வாய்ப்புக்களும் உள்ளன. பல்வேறு பதவிகளில் இருந்துகொண்டு கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதைப் போன்று எமது தாய்நாட்டை பார்க்கிலும் முற்றிலும் வேறுபட்ட காலநிலையை கொண்ட நாட்டில் நீங்கள் உயர்ந்த அர்ப்பணிப்பைச் செய்து வருகிறீர்கள் என நான் நம்புகிறேன்
நான் இன்று காலை இலங்கை மாணவர்கள் கல்விகற்கும் டோஹாவில் உள்ள பாடசாலைக்கு சென்று அவர்களது கல்வி நடவடிக்கை குறித்தும் அவர்களது வசதி வாய்ப்புக்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் அறிந்து கொண்டேன். அவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெறவும் அவர்களது கல்வி முழுமனித சமூகத்திற்கும் பயனளிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நீங்கள் எமது தாய் நாட்டிலிருந்து சுமார் நான்கரை மணித்தியால தூரத்தில் உள்ளீர்கள். உங்களுக்கு இலங்கை பற்றிய தகவல்கள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டிருக்கும். இணையத்தளங்களின் வாயிலாகவும் தொலைபேசிகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். சிலர் மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, அல்லது வருடத்திற்கு ஒரு முறை தாய் நாட்டிற்கு வந்து போகக்கூடும்.
அவற்றினூடாகவும் நீங்கள் தகவல்களை அறிந்து கொள்கிறீர்கள். நான்கரை மணித்தியாலத் தூரத்தில் இருந்த போதும் நீங்கள் செய்யும் தொழில்களில் உள்ள கஷ்டங்கள் மற்றும் ஓய்வின்மை காரணமாக தாய்நாட்டைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்காது இருக்க முடியும். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பெரும்பாலும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இவ்வாறு நீங்கள் இணையத்தளங்களினூடாக அல்லது சமூக வலைத்தளங்களின் வாயிலாக பார்க்கின்ற இலங்கையைப் பார்க்கிலும் எமது நாடு வேறுபட்டது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றில் பிரசுரிக்கப்படும் தகவல்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவை போலியானவை என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இலங்கையின் அரசியல் நிலை நிர்வாகம் அரசினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்தும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் குறித்தும் மிகவும் திட்டமிட்ட முறையில் பொய்யான விடயங்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரம், ஜனநாயகம், ஊடகச் சுதந்திரம் என்பன எவ்வளவு தூரம் பொறுப்புடன் அனுபவிக்கப்படுகிறது என்பது பிரச்சினையாகும் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
அதேபோன்று நாட்டுக்கு வெளியேயுள்ள இலங்கையர்கள் பிழையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமது இணையத்தளங்;;கள் முகநூல்கள் ஊடாக பொய்யான விடயங்களைப் பரப்புகின்றனர். இதற்கு அவர்களுக்கு இடமளித்திருப்பது ஜனநாயக சுதந்திரமாகும். புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் மனிதனின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் சில நேரங்களில் தொழில்நுட்பத்தை பிழையான வழியில் பயன்படுத்துகின்றவர்கள் குறித்து நீங்கள் அறிவீர்கள். ஒருவர் மீது சேறு பூச வேண்டும் என்றால் முகநூலின் வாயிலாக ஒழுக்கப் பண்பாடுகளில் இருந்து விலகி செயற்படுகின்றவர்கள் குறித்து நீங்கள் அறிவீர்கள்.
இன்று பல நாடுகளில் முகநூல், இணையத்தளங்கள், தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடைசெய்யப்படுள்ளது. எனினும் நாம் அனைத்திற்கும் சுதந்திரம் வழங்கியுள்ளோம். நாட்டை துண்டாடுகிறார்கள், நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள், பௌத்த சமயத்தை இல்லாதொழிக்கிறார்கள், இராணுவ முகாம்களை அகற்றுகிறார்கள், வடக்கை தாரைவார்க்கிறார்கள் போன்ற விடயங்களை இணையத்தளங்களின் ஊடாக நீங்கள் காணக்கூடும்.
நாட்டு மக்களினதும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களினதும் மிகப் பெரும்பான்மை ஆசீர்வாதத்துடன் 2015 ஜனவரி 8 ஆம் திகதி புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இலஞ்சம், மோசடி சீர்கேடுகளை ஒழித்து சிறந்த அரசியல் சூழலை உருவாக்குவதற்காகவும் நாட்டில் சுதந்திரம், சமாதானம், ஊடகச் சுதந்திரம் உண்மையாக அனுபவிக்கின்ற சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் பாடுபடுகிறோம். எனினும் ஒரு சிறு பிரிவினர் நாட்டில் சுதந்திரத்தைப் பிழையாகப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டைப் பற்றியும் நாட்டின் நடவடிக்கை குறித்தும் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் பிழையான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பு குறித்த தகவல்கள் அச்சு ஊடகங்களில் மிகவும் பிழையான முறையில் வெளியிடப்பட்டிருந்தன. எமது நாட்டில் 30 வருட யுத்தம் ஒரே அடியாக, ஒரு பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம். எமது நாட்டில் பலகாலமாக இருந்து வந்த மொழிப்பிரச்சினை, கலாசாரப் பிரச்சினை, சமயப் பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் செயற்பட்டு வருகிறோம். புதிய அரசியல் அமைப்பு குறித்த மிகவும் பிழையான தகவல்களை நாம் அரசாங்கம் என்ற வகையில் சரி செய்தாலும் சரியான தகவல்களை பார்க்கிலும் பிழையான தகவல்களே அதிகளவில் சென்றடைகின்றன.
எமது நாட்டின் வரலாற்றுப் புகழை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் நாட்டில் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நீண்ட காலமாகவே வெளிநாடுகளில் உள்ளவர்களும் சரி இலங்கையில் உள்ளவர்களும் சரி இலங்கையை சிங்கப்பூராக மாற்ற முடியாதா? எனக் கேட்கின்றனர்.
எமது நாட்டை கொரியாவைப் போன்று மாற்ற முடியாதா? ஐரோப்பிய நாட்டை போன்று மாற்ற முடியாதா? அல்லது கட்டாரைப் போன்று மாற்ற முடியாதா? என்று கேட்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல் முறைமை கலாசாரம் குறித்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் உள்ள அரசியல் முறையல்ல எமது நாட்டின் முறைமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டில் உள்ள அரசியல் முறை சீனாவிலுள்ள அரசியல் முறைமை அல்லது கட்டார் நாட்டிலுள்ள அரசியல் முறைமையோ அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் சுதந்திரம் ஜனநாயகம் குறித்த அடிப்படைச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் நாடு. மக்களுக்கு இலவச கல்வியையும் இலவச சுகாதார சேவையையும் பெற்றுக்கொள்ளும் சுதந்திரமாக எழுத வாசிக்க எதிர்ப்புத் தெரிவிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்த என்று அவை அனைத்திற்கும் சுதந்திரம் உள்ளது. நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக இந்த சுதந்திரம் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறது என்பது பிரச்சினைக்குரியதாகும். இது ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டிய விடயமாகும்.
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் முன்னர் நாட்டில் இருந்த நிலைமையை நீங்கள் அறிவீர்கள். ஒருவர் இன்னொருவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு பயப்படும் நிலைமை இருந்தது. தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக கூக்குரலிட்டனர். இந்த இரண்டரை வருட காலப் பகுதியில் இலங்கையில் எங்கேனும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படவில்லை. எந்த ஊடகவியலாளரும் நாட்டை விட்டும் வெளியேறிச் செல்லவில்லை. எந்த ஊடக நிறுவனங்களுக்கும் தீ மூட்டப்படவில்லை, கொலைகள், காணாமல் போதல்கள் இடம்பெறவில்லை.
நாம் நாட்டுக்கு பெற்றுக் கொடுத்துள்ள முக்கியமான விடயம் சுதந்திரமாகும். இதற்குள் தான் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இன்று சமூக ஊடகங்களில் இணையத்தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள் இதற்கு முன்பிருந்த ஆட்சியில் இந்த எந்தவொன்றிற்கும் இடம் இருக்கவில்லை. எனினும் ஒரு நாட்டில் இருக்க வேண்டிய ஒழுக்கம், பண்பாடு இவற்றுடன் சேர்த்து சுதந்திரமான சமூகமொன்று கட்டியெழுப்படுகின்ற போதுதான் பொருளாதார சுபீட்சம் சாத்தியமாகும்.
எனவே இலங்கையர்களான நீங்கள் கட்டார் நாட்டில் தொழில் செய்வதன் மூலம் ஆற்றுகின்ற சேவைகளை நான் மதிக்கிறேன். எமது தாய்நாட்டின் அபிவிருத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் நாம் உண்மையாக செயற்பட வேண்டும். சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் இன்று உலகிலுள்ள போட்டித் தன்மைக்கு மத்தியில் எமது தாய் நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் சிறந்ததோர் ஆட்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் நாட்டில் வாழும் மக்களும் நாட்டுக்கு வெளியேயுள்ள உங்களைப் போன்ற இலங்கையர்களுக்கும் பாரிய பொறுப்புக்கள் உள்ளன.
நாம் இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் கட்டியெழுப்பியிருக்கின்ற நட்புறவானது எமது நாட்டுக்கு நீண்ட காலத்தின் பின் கிடைத்திருக்கும் சந்தர்ப்பமாகும். இந்த விஜயத்தின் மூலம் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் இலங்கையின் அபிவிருத்தியில் பெரும்பங்கு வகிக்கும். கட்டார் நாடு கடந்த சில தசாப்த காலமாக இலங்கையின் அபிவிருத்திக்கு பெருமளவு உதவியுள்ளது. இதன் மூலம் நாம் மேன்மேலும் இருதரப்பு உறவுகளையும் வர்த்தக உறவுகளையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே எமது இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத்தில் கடந்த காலங்களை பார்க்கிலும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் நட்புறவுடன் செயற்பட்டு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பொருளாதார வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தொழில்நுட்ப அறிவுகளை பெற்றுக்,கொள்ளவும் முடியும். இதன் மூலம் கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கும் அதிக நன்மையும் மதிப்பும் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே எமது தெளிவான நோக்கம் நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள இலங்கையர்களுக்கும் கௌரவமானதொரு நாடாக இலங்கையை மாற்றுவதாகும்.
அந்த வகையில் நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டுகின்றேன். இந்த நிகழ்வுக்கு வருகை தந்து எமக்கு வழங்கிய வரவேற்பு மற்றும் ஒத்துழைப்புக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றேன். அரசாங்கம் என்ற வகையில் எத்தகைய சவால்கள் வந்தபோதும் எத்தகைய தடைகள் வந்தபோதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனக் கூறி விடைபெறுகிறேன்.