• Sat. Oct 11th, 2025

இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – நபுஹான்

Byadmin

Oct 31, 2017

இதே மஹிந்த ஆட்சியில் நடந்திருந்தால் சிலர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் – நபுஹான்

நல்லாட்சியில் இடம்பெறும் சம்பவங்கள் மஹிந்தவின் ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் சில முஸ்லிம் போலிகள் வானத்திற்கும் பூமிக்குமாக குதியாய் குதித்திருப்பார்கள் என பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதியின் உத்தியோக ஊடகப் பிரிவானது கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா மாடு அறுப்பை மிக தந்திரோபாயமாக தடை செய்துள்ளார்.இதனை சாதாரணமாக சிந்தித்தால் கூட அறிந்துகொள்ளலாம்.

இதே விடயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் இடம்பெற்றிருந்தால் இலங்கை முஸ்லிம்களுடைய விமர்சனம் எப்படி அமைந்திருக்கும் என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள்.உடனே அசாத்சாலி, முஜீபுர் ரஹ்மான் போன்றோர் மைக்குகளை தேடி அலைந்திருப்பார்கள். ஊடக மாநாடு நடத்துவார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முடிந்தவரை விமர்சிப்பார்கள்.

ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனா தெளிவாக தனது இனவாத முகத்தை வெளிப்படுத்துகின்ற போது சில அதனை அறிந்து சுதாகரித்து கொள்ள தவறுகின்றமை தான் கவலையான விடயமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடையை காலத்தில் மாடு அறுப்பதை தடை செய்யுமாறு யாராவது ஆர்ப்பாட்டம் செய்தால் கூட அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பெரிய விமர்சனமாகிவிடும்.

ஒரு முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் வந்த போது இலங்கை அரசு மாடு அறுப்பதை சில காலங்களுக்கு தடை செய்திருந்தது.இந்நோயின் தாக்கத்தை முஸ்லிம் பகுதிகளில் கூட கண்ணாறக் கண்ட போது அன்று மஹிந்த அரசு முஸ்லிம்களின் குருட்டுத் தனமான விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது. அன்று சிலர் மூடர்களை போல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விமர்சித்தனர் ஆனால் உண்மையில் விமர்சிக்க வேண்டியது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேனாவையேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *