மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்
உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.