இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த ஆப்கானிஸ்தான், ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என்ற ரீதியில் சிம்பாப்வேயை வெள்ளையடித்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், ரஹ்மனுல்லா குர்பாஸின் 92 (48), இப்ராஹிம் ஸட்ரானின் 60 (49), செதிகுல்லா அட்டலின் ஆட்டமிழக்காத 35 (15) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் பிரட் இவான்ஸ் 4-0-33-2, சிகண்டர் ராசா 4-0-20-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 211 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே சார்பாக அணித்தலைவர் சிகண்டர் ராசா 51 (29), பிரயன் பென்னிட் 47 (31), றயான் பேர்ளின் 37 (15), தஷிங்கா முசெகிவாவின் 28 (17) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 201 ஓட்டங்களையே பெற்று ஒன்பது ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் பஸல்கக் பரூக்கி 4-0-29-2, முஜீப் உர் ரஹ்மான் 4-0-30-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக குர்பாஸும், தொடரின் நாயகனாக ஸட்ரானும் தெரிவாகினர்.