உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (16) மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார்.
குறித்த தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமைகள் காரணமாக, தற்போது அவர் சர்வதேச மேசைப்பந்து தரவரிசையில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலகின் 3வது இடத்தில் உள்ளார்.
இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் மேசைப்பந்துத் தொடரில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரியில் நடைபெற்ற மேசைப்பந்துத் தொடர்கள் இரண்டிலும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
ஹங்கேரியில் வைத்து உலகச் செம்பியனான போலந்து வீரரைத் தோற்கடித்ததன் மூலம், தாவி உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிக்க முடிந்தது.
தாவியின் தந்தையான ஹசித சமரவீர மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மேசைப்பந்துப் பயிற்றுநர்கள் ஆவர்.
இந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தாவி, ஒரு தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என சர்வதேச மட்டப் போட்டிகளில் 10 பதக்கங்களை வென்றுள்ளார்.