உள்ளூராட்சி சபைகளுக்கு 2000 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள்
25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் புதிய தேர்தல் முறைமையின் கீழ் 2,000 க்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். முன்னர் அமுலில் இருந்த விகிதாசார தேர்தல் முறைமையின் படி 82 பெண் பிரதிநிதிகளே உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு சபைக்குமான உறுப்பினர்களின் எண்ணிகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த தேர்தலில் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர் தொகையுடன் ஒப்பிடுகையில் இம்முறை 4,486 ஆல் அதிகரித்துள்ளது. இவர்களில் 3,840 உறுப்பினர்கள் தொகுதிவாரி முறைமையின் கீழும் எஞ்சியோர் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 341 உள்ளூராட்சி சபைகளில் 276 பிரதேச சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 24 மாநகர சபைகள் ஆகும். அடுத்த வருடம் பெப்ரவரி 15 இல் அனைத்து சபைகளும் கூடுகின்றன.
உள்ளூராட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டமைக்கு வரவேற்பளித்துள்ள பப்ரல் அமைப்பு, உள்ளூராட்சி நிர்வாகத்தில் தகுதியும் திறமையும் மிக்க, முடிவெடுக்கும் ஆற்றல் மிகுந்த பெண்களை தேர்தலில் நிறுத்துவது கட்சிகளின் பாரிய பொறுப்பாகும் என தெரிவித்துள்ளது.