ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடுத்த முடிவால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி. பிரிந்து போட்டியிட முடிவு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அடுத்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளமையால் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக இத்தனை காலமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக கூட்டு சேர்ந்து போட்டியிட்டு வந்த சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் தனித்தும், வேறு சில கூட்டுக்களிலும் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.
முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணில் அங்கத்துவம் பெற்றிருந்த சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மீளப்புதிப்பித்துக்கொளளும் நோக்குடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முக்கிய சந்திப்பொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி நிற்கின்ற நிலையில் அடுத்துவரும் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் போது சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அதன்போது அடுத்த தேர்தல்களில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சின்னமான கைச் சின்னத்திலேயே களமிறங்குவது என்று ஜனாதிபதி சுதந்திரகட்சி செயலாளர் உள்ளிட்டவர்களால் கூறப்பட்டது. எனினும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் கை சின்னம் தொடர்பில் தமிழ் மக்களிடத்தில் காணப்படுகின்ற எதிர்மறையான விடயத்தினை சுட்டிக்காட்டினார்கள்.
குறிப்பாகபண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தினைக் கொண்ட நபர் என்ற எண்ணம் இன்றும் இருக்கையில் அவர் பயன்படுத்திய இச்சின்னத்தினை மீளவும் கொண்டுவருவதானது பழைய விடயங்களை மீள நினைவு படுத்துவது போன்றாகிவிடும். ஆகவே தயவு செய்த இச்சின்னத்தினைக் கைவிட வேண்டும் என்று சிறுபான்மை தரப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இச்சமயத்தில் அந்த விடயத்தினை ஏற்றுக்கொண்ட கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, முன்னணியின் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் வெற்றிலையை அல்லது கதிரையை பயன்படுத்த முடியும் என்று கூறி இணக்கப்பாட்டினை எட்டியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் அடுத்த சுற்றுப் பேச்சுக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என எதிர்ப்பாக்கப்பட்டுகின்றன.
ஆனால் தற்போது கை சின்னத்திலேயே போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதிபட அறிவித்துள்ளமையால் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் ஆகக் குறைந்தது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியுடன் ஒரு சில இடங்களிலாவது இணைந்து போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டினைக் கூட மாற்றியுள்ளன.
குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் தமது சின்னத்திலேயே தனித்து போட்டியிடுவது இல்லையேல் வேறு சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டாக போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளன.
குறிப்பாக இந்த நிலைப்பாட்டினால் மைத்திரிபால சிறிசேன தலமையிலான சு.க. தரப்பினர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் மகிந்த தரப்பு அந்த முடிவு தமக்கு நன்மையானதே என்ற நிலையில் அமைதியைப் பேணிவருவதாகவும் மேலும் அறியமுடிகின்றது.