• Sun. Oct 12th, 2025

“இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”. ( இந்தக்கதை உங்கள் வாழ்க்கை)

Byadmin

Nov 24, 2017

“இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”. ( இந்தக்கதை உங்கள் வாழ்க்கை)

இமாம் குர்துபி ரஹ்மதுல்லா அவர்கள் கூறினார்கள்.

இவ்வுலக வாழ்க்கையிலிருந்து உனது பங்கு கபன் மாத்திரமே”

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லா அவர்களோ இவ்வுலக வாழ்வின் மிக அற்பமான இன்பத்தை பின்வரும் கதையின் மூலம் மிக அழகாக எடுத்துரைக்கிறார்கள்.எவ்வாறெனில்,

அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் பயணம் செய்கிறான்.செல்லும் வழியில் காட்டின் சல சலப்பில் அம்மனிதன் திரும்பிப் பார்க்க, தன் பின்னே ஒரு சிங்கம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட அவன் வெருண்டு ஓட ஆரம்பிக்க,அந்த சிங்கம் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.உயிர்ப் பயத்தில் திக்குத் தெரியாமல் ஓடிய அவன் முன்னே ஒரு பாழும் கிணறு எதிர்ப்பட , செய்வதறியாது ஒரு நொடி திகைக்கிறான்.

பிறகு வேறு வழியின்றி அக்கிணற்றில் குதிக்கிறான்.கிணற்றினுள் வீழ்ந்துகொண்டிருக்கும் அம்மனிதனின் கைகள் எதையாவது பற்றிக்கொள்ள அந்தரத்தில் தடுமாற, அவனது கைகள் தன்னிச்சையாய் அடர்ந்த கொடியொன்றினை பற்றிக்கொள்ள, அம்மனிதன் இப்போது அக்கொடியை இறுக்கிப் பிடித்தபடி கிணற்றின் பாதி உயரத்தில் ஊசலாடிக் கொண்டே சற்று ஆசுவாசமாய் பெருமூச்சு விடுகிறான்.
அவனது ஆசுவாசப் பெருமூச்சை கிணற்றின் கீழிருந்து வந்த ஒரு பயங்கர சீறல் சத்தம் தடுத்து நிறுத்த,பயத்தோடு கீழே பார்க்க,ஒரு பெரிய பாம்பு அம்மனிதனைப் பார்த்து சீறிக்கொண்டிருக்க அவன் வெல வெலத்துப்போய் தன் பிடியை இருக்கியபடியே மேலே ஏற முயற்சிக்க,மேலே இருந்து வந்த சிங்கத்தின் கர்ச்சனை அவனை அப்படியே உறைய வைத்தது.

கிணற்றின் கீழே பாம்பு இவன் விழும்வரை பார்த்திருக்க,சிங்கம் இவன் மேலே வரும்வரை பார்த்திருக்க, இப்போது அம்மனிதன் பற்றியிருந்த கொடியில் மேலிருந்து ‘கீச் கீச்’ என்ற சத்தத்தோடு இரண்டு எலிகள் அக்கொடியில் வீற்றிருக்க, அம்மனிதன் திகைப்பாய் அவற்றை உற்றுப் பார்க்க, ஒரு கறுப்பு எலியும், வெள்ளை எலியும் தான் பற்றியிருந்த கொடியை அரிப்பதைக் கண்டு தனக்கு வரவிருக்கும் பேராபத்தை நினைத்து பயத்தில் சில்லிட்டுப் போனான்.

பயத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கண்களை மூடிக்கொண்டவனின் கைகளில் ஏதோ ஒன்று பட்டுத் தெறிப்பதை உணர்ந்து கண்களை திறந்தவன்,தன் முன்னங்கையில் தேனடையின் சிதறல்களும்,தேனும் வழிவதைக் கண்டு அண்ணார்ந்து பார்க்க, அப்பாழும் கிணற்றின் மேல் ஓரத்தில் ஒரு தேன் கூடு இருப்பதையும், அதிலிருந்து தேன் தன் கைகளில் விழுந்து தெறிப்பதையும் கண்டவன், தன்னை சுற்றியும்,மேலேயும்,கீழேயும் இருக்கும் ஆபத்தையும், தான் பற்றியிருக்கும் கொடியை கறுப்பு ,வெள்ளை என இரு எலிகள் அரிப்பதையும் அக்கணம் மறந்தவனாய்,தன் கையில் விழும் தேனை நாவினால் நக்கி , அதன் சுவையை ரசிக்கிறான்.தன்னை சூழ்ந்துள்ள பயங்கர ஆபத்துகளை மறக்கிறான்.

இதில் அம்மனிதனை துரத்தும் சிங்கமே நாம் பயப்படும் மரணம்!

அம்மனிதன் விழக் காத்திருக்கும் பாம்புதான் நமக்காக காத்திருக்கும் மண்ணறை!!

அம்மனிதன் பற்றியிருக்கும் கொடிதான் நம் வாழ்க்கை!!!

கறுப்பு, வெள்ளை எலிகள்தான் நம் ஆயுளை அரிக்கும் இரவும்,பகலும்!!!!

அம்மனிதன் சுவைக்கும் தேன் தான் இவ்வுலக வாழ்க்கை!!!!!

எம்.எம்.ஷியாம்
தெலும்புகஹவத்தை,
அக்குறணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *