ஜனாதிபதியை விமர்சிக்க வேண்டாம் – பிரதமர் எச்சரிக்கை
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை விமர்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஐ.தே.க. பாராளுமன்றக் குழுவினரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, ஒருங்கிணைந்த அரசுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களைப் பகிர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான தமது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, இலங்கையில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்காலத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
“நாடு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருந்தேன். அதன்போது அவர், கூட்டு எதிரணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையைத் தவிர்க்கும் நிலையில் தாம் இருக்கவில்லை என்றும் அதைத் தடுக்க முயற்சித்தால், கட்சியின் தலைமைப் பதவியில் இருந்துகொண்டு கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழும் என்றும் தெரிவித்ததாக என்னிடம் கூறினார்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இந்தப் பேச்சுவார்த்தையை ஒரு விவகாரமாக ஆக்கிப் பேசவேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.