ஒகி புயலால் கேரளாவில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு..!
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையானது ஒக்கி புயலாக வலுப்பெற்றது. தமிழக – கேரள கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த அந்தப் புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. வரலாறு காணாத வகையில் அந்தப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது.
அதேபோன்று கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஒகி புயல் ஏற்படுத்தி சென்றது. கடலுக்குள் சென்ற மீனவர்களில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கேரளத்தின் ஆலப்புழா கடல் பகுதியில் நேற்று காலை 3 உடல்கள் கரை ஒதுங்கியதாகத் தெரிகிறது. அந்த சடலங்களை மீட்ட பாதுகாப்புப் படையினர் அவற்றை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையும் சேர்த்து கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.இதற்கு நடுவே, காணாமல் போன 96 மீனவர்களைக் கண்டறியும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.