• Sat. Oct 11th, 2025

ஆர்.கே.நகர் தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு

Byadmin

Dec 18, 2017

(ஆர்.கே.நகர் தேர்தல்: ஓட்டுப்பதிவுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு)

ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடப்பதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா புகாரால் கடந்த முறையை போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு விடுமோ, என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான வாய்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகரில் கடந்த 2 நாட்களாக பணப்பட்டுவாடா புகாரால் பல இடங்களில் மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ஒரு சிலரது மண்டையும் உடைந்தது.

இதன் காரணமாக ஆர்.கே. நகர் தொகுதியில் பதட்டம் நீடிக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் மேலும் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் பெரிய அளவில் மோதல் சம்பவங்கள் நடைபெற்று விடக் கூடாது என்பதில் போலீசார் உறுதியாக உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் 21-ந்தேதி அன்று தொகுதி முழுவதும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள்.

ஓட்டுப்பதிவு அன்று வாக்குசாவடிக்கு வெளியாட்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக போலீசாருக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

வாக்குசாவடி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தேவையில்லாத நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எந்த சூழ்நிலையிலும் தேவையில்லாமல் வாக்குசாவடிக்குள் போலீசார் நுழைய கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் தொடர்ச்சி நடைபெற்று வரும் மோதல் சம்பவங்கள் வாக்குப்பதிவு அன்று விஸ்வரூபம் எடுத்து விடக்கூடாது என்று என்பதிலும் போலீசார் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவது எப்படி? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *