• Tue. Oct 14th, 2025

ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பில் பிச்சை கேட்பது தடை

Byadmin

Dec 20, 2017

(ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பில் பிச்சை கேட்பது தடை)

கொழும்பின் வீதிகளிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ யாசகம் கேட்பதற்கு, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் தடைவிதிக்கப்படும் என, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நேற்று (19) தெரிவித்தார்.

தமது அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 600 யாசகர்கள் காணப்படுகிறார்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் குறிப்பிட்டார்.

யாசகம் கேட்பவர்களால் தொந்தரவு ஏற்படுகிறது எனவும், அதைத் கருத்திற்கொண்டும், கொழும்பை அழகாக்கும் திட்டத்தின்படியும், கொழும்பு நகர எல்லைக்குள் யாசகம் கேட்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, அவர் குறிப்பிட்டார்.

ஆனால், குறித்த யாசகர்களை மீட்பதும், தமது அமைச்சின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று, 80 மில்லியன் ரூபாய் செலவில், அம்பலாந்தோட்டை, றிடீகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

“உதவிகளற்ற யாசகர்களை, கருணையுடன் நாம் நடத்துவோம். ஆனால், இதைத் தொழிலாகக் கொண்டு இயங்குபவர்கள், வேறு தொழிலை நாடிச் செல்ல வேண்டும். இல்லாவிடின், மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

யாசகம் கேட்பதில் ஈடுபடும் சிறுவர்களுக்கு, பாடசாலைக் கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், உதவிகளற்றவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும், அவர்களுடைய இறுதிக் காலம் வரை பராமரிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *