• Sun. Oct 12th, 2025

நம்பிக்கை எனும் மாமருந்து

Byadmin

Aug 16, 2025

(நம்பிக்கை எனும் மாமருந்து)25

நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் காய்ச்சல், தலைவலி என்றாலே பதற்றமாகிவிடுகிறோம். எதிர்பாராத ஒரு விபத்து, அறுவை சிகிச்சையை சந்திக்கும்போது உறுப்புகளை இழக்க நேரிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று முடிவுக்கு வருகிறவர்கள்தான் பெரும்பாலானோர். இவர்களையெல்லாம் பார்த்து சிரிப்பதுபோல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு மகாமனிதர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், டுஷ்கா மற்றும் போரிஸ் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் நிக் உஜிசிக் (Nick Vujicic). பிறக்கும்போதே இரண்டு கைகள், இரண்டு கால்கள் இன்றி பிறந்தவர். இரண்டு கைகளும், கால்களும் இல்லாத நிலையில் பிறந்ததால், ‘நான் ஏன் மற்ற குழந்தைகளைப் போல இல்லை. நம்மால் அவர்களைப்போல ஓடியாடி விளையாட முடியவில்லை. நான் என்னுடைய ஒவ்வொரு வேலைக்கும் அப்பா, அம்மாவை எதிர்பார்த்து இருக்க வேண்டியுள்ளதே’ என்று தன்னுடைய குழந்தைப் பருவத்தில் ஏங்கியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் தான் உயிர் வாழ வேண்டியதில்லை என்ற வேதனையான முடிவுக்கும் வந்துள்ளார். தான் இறந்துவிட்டால் பெற்றோர் எந்த அளவு வேதனைப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்த்து நிக் உஜிசிக் அந்த முடிவை மாற்றிக் கொண்டார். வாழ்ந்தாக வேண்டும் என்று உத்வேகம் கிளம்பியவுடன்தான் அவரது வாழ்வில் வெற்றி வலம் வரத் தொடங்கியது. தன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை அலசி ஆராய்ந்த நிக் உஜிசிக், கால்களாலேயே எழுதத்தொடங்கினார்.
தன்னுடைய புத்திக்கூர்மையால் வணிகவியல், கணிதவியல் பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றார். ஆரம்ப காலங்களில் தேவாலயத்தின் பிரார்த்தனை கூட்டங்களில் தன்னுடைய உரைகளை நிகழ்த்த ஆரம்பித்த இவர், இன்று உலகம் முழுவதும் 60 நாடுகளுக்குமேல் பயணம் செய்து சொற்பொழிவுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டில் கலிபோர்னியா நகரில் Life without Limbs என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, உலகம் முழுதும் உள்ள பல மில்லியன் மாற்றுத் திறனாளிகளுக்கு அதன்மூலம் வாழ்வளித்து வருகிறார்.
தன்னுடைய தன்னம்பிக்கை உரைகளை டி.வி.டிகளாக வெளியிட்டுவரும் இவர் ‘Life’s Greater Purpose’ என்ற குறும்படத்தையும், Life without Limits என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். பல குறும்படங்களிலும் நடித்துவரும் நிக் உஜிசிக் The Butterfly Circus என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கை, கால்கள் இல்லாத மனிதனை கடவுளால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால், இவ்வுலகின் எல்லா மனிதர்களின் இதயங்களையும் அவரால் ஏதோ ஒருவிதத்தில் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்’ என்பதே இவரின் முக்கியக் கொள்கை.
‘எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் அதை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக அதைக் கடந்து வர வேண்டும். அப்போதுதான் மூன்றாவதாக மற்றவர்களுக்கு சுமையாக இருக்காமல் நாம் பயன்பட முடியும். எல்லா மனிதனுமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க முடியும். யாருமே தேவையற்றவர்கள் இல்லை’ என்பதையே என் வாழ்க்கை செய்தியாக மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்’ என்கிறார் நிக் உஜிசிக்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *