உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஸ்திரமற்ற நிலை தொடருமாயின் அரச நிர்வாகம் பலமிழந்து நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு இடமுள்ளதாக மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
நாட்டில் தளம்பல் நிலையற்ற ஸ்திரமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. எனினும் தேர்தலுக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
விசேடமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது கவனம் செலுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் சமயங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தி சிறந்த கலாசாரத்தையும் உறுதிசெய்து நாட்டில் நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்க வேண்டும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.