• Sat. Oct 11th, 2025

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ? (முதலாவது தொடர்…….)

Byadmin

Jun 8, 2017

மத்திய கிழக்கில் இஸ்லாமிய முற்போக்கு சக்திகளை அழிப்பதில் கூட்டாக செயற்பட்டு வந்த அரபு நாடுகள், தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, கத்தார் நாட்டுடனான அத்தனை உறவுகளையும் திடீரென துண்டித்துக் கொண்டார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்கு சென்று சில நாட்களே கடந்த பின்பு இந்த அறிவிப்பு வெளியானதனால், இதன் பின்னணியில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இருப்பதாக சந்தேகிக்கப் படுகின்றது. இதனால் சவூதி அரேபியா மற்றும் அதன் தோழமை நாடுகள் மீது இஸ்லாமிய உலகில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன், கத்தார் நாட்டின்மீது அனுதாபம் உருவாகியுள்ளது.
இது பொருளாதார, இராணுவ நலன்கள் மற்றும் அமெரிக்காவுக்கு அதிகம் நெருக்கமாக இருப்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக எழுந்துள்ள பிரச்சினையே தவிர, எந்த அரபு நாடுகளும் உலகின் இஸ்லாமிய விரிவாக்கத்துக்காகவோ, கிலாபத்தை நிலை நாட்டவோ, பாலஸ்தீனை மீட்பதற்கான திட்டமிடலினால் ஏற்ப்பட்ட முறண்பாடுகளோ அல்ல.
மத்திய கிழக்கில் பெரும்பான்மையான நாடுகளில் மன்னராட்சியே நடைபெறுகின்றது. இதனால் தங்களது குடும்ப ஆட்சியை தொடர்ந்து பாதுகாத்து கொள்வதற்காக நேரடியாக அமெரிக்காவினதும், மறைமுகமாக இஸ்ரேலினதும் உதவியில் தங்கி இருக்கவேண்டிய நிலையில் இந்நாடுகள் உள்ளன.
மத்திய கிழக்கில் முற்போக்கு சக்திகள் உருவெடுத்தால் அது தங்களது குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, அமெரிக்காவை தூண்டிவிட்டு அவ்வாறு உருவெடுக்கின்ற முற்போக்கு சக்திகளை அழிப்பதில் இந்த நாடுகள் ஒன்றாக செயல்பட்டு வந்தன.
இவ்வாறு கடந்த காலங்களில் அமெரிக்காவின் விருப்பங்களுக்கு ஏற்ப சவூதி அரேபியாவின் தீர்மானங்களுக்கு கத்தார் உற்பட மன்னர் ஆட்சி நடைபெறுகின்ற அரபு நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்து வந்ததுடன், சகோதர இஸ்லாமிய முற்போக்கு நாடுகளையும், இயக்கங்களையும் அழித்தொழிப்பதில் முன்னின்று ஒன்றாக செயல்பட்டு வெற்றிகண்டன.
அந்தவகையில் ஈரானில் ஷா மன்னரின் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு இமாம் ஆயத்துல்லாஹ் கொமைனி அவர்களின் தலைமையில் 1979 ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவை எதிர்க்கக் கூடிய முதுகெலும்புள்ள இஸ்லாமிய தலைவராக இமாம் கொமைனி மட்டுமே காணப்பட்டார். இதனால் உலக முஸ்லிம்கள் மத்தியில் கொமைனிக்கு வரவேற்பு கிடைத்தது.
இஸ்லாமிய உலகில் கொமைனிக்கு கிடைத்த செல்வாக்கினால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஈரான் மீது சீயா முத்திரை குத்தப்பட்டு ஈரானை இஸ்லாமிய உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்த இந்த அரபு நாடுகள் சதிகளை மேற்கொண்டது.
அதற்காக ஈராக்கிய அதிபர் சத்தாம் ஹுசைன் அவர்கள் பயன்படுத்தப் பட்டார். பேசித்தீர்க்க வேண்டிய சிறிய பிரச்சினையை பெரிது படுத்தி ஈரான் – ஈராக் யுத்தம் ஒன்றுக்கான சதிகள் அரங்கேற்றப்பட்டது. இதற்காக அமெரிக்காவின் ஆயுத உதவியினாலும், அரபு நாடுகளினது பொருளாதார உதவியினாலும் ஈரான் மீது ஈராக்கிய அதிபர் சதாம் ஹுசைன் போர் தொடுத்தார்.
சுமார் பத்து வருடங்கள் நீடித்த இந்த யுத்தம், 1989 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தின் மூலம் சத்தாம் ஹுசைனால் வெற்றிபெற முடியாவிட்டாலும், ஈராக் மத்திய கிழக்கில் இராணுவ வல்லமைகொண்ட நாடாக தன்னை வளர்த்துக் கொண்டது. இமாம் கொமைனியின் மறைவிற்கு பின்பு உலக முஸ்லிம்கள் மத்தியில் இராணுவ வல்லமை கொண்ட ஈராக்கிய அதிபர் சத்தாம் ஹுசைன் இரும்பு மனிதராக தென்பட்டார்.
சதாம் ஹுசைனின் இராணுவ பலத்தினையும், இஸ்லாமிய உலக அரங்கில் அவருக்கு கிடைத்த செல்வாக்கினையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரபு உலகமும், அமெரிக்காவும் அவரை அழிக்க திட்டம் தீட்டியது. அதற்காக குவைத் நாட்டினை ஆக்கிரமிக்க தூண்டியது.
தொடரும்………………….

 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *