• Sat. Oct 11th, 2025

கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை

Byadmin

Feb 26, 2018

(கூட்டறிக்கை: இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை)

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு),  வரும் 25.02 .2018 அன்று  தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு  விருது வழங்கி மதிப்புச் செய்வதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்டனம் செய்கிறோம்.

 

வாசு முருகவேலால் எழுதப்பட்ட ‘ஜெப்னா பேக்கரி’ நடந்த வரலாற்று உண்மைகளை முற்றாகத் திரித்து  முஸ்லீம்களை உளவாளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  அதன் வழியே, இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லீம்கள் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த   நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை   இந்நூல் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

 

விரட்டப்பட்ட 75ஆயிரம் முஸ்லீம்களிடையேயும் ஓர் ஆயுததாரியோ ஓர் உளவாளியோ இருக்கவில்லை. அந்த மக்கள் நாட்டின் தென்பகுதிகளில் அகதிகளாக வாழ விதிக்கப்பட்டார்கள் என்பதைக் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

 

எனவே, வரலாற்றைத் திரித்து, எந்தவொரு சான்றையும் இதுவரை முன்வைக்காது, முஸ்லீம்கள்மீது பழி சுமத்தவும் அதன்வழியே இஸ்லாமியர்களிற்கும் – தமிழர்களிற்கும இடையேயான முரண்களைக் கூர்மை செய்யவும் திட்டமிட்டு  செயற்பட்டுவரும் இந்நுாலாசிரியரிற்கு  இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் விருது வழங்குவது, அந்த இயக்கம்  எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை அங்கீகரிக்கும் செயலாகவே கருதுகிறோம்.

 

இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்திற்கு இலங்கை முஸ்லீம்கள் அனுபவித்த வேதனைகளையும் இழப்புகளையும் இனவழிப்புகளையும் கண்டுகொள்ளாமலிருப்பதற்கும் கண்டிக்காமலிருப்பதற்கும் என்ன நியாயப்பாடு இருக்கும் என எங்களிற்குப் புரியவில்லை. அதேபோல யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டபோது நிகழ்ந்த உண்மை வரலாற்றை பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அறிந்துகொள்ள முயலாமல் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பிலிருந்து தெரிந்து கொள்ள முயல்வதும் அதற்கு விருது கொடுத்து மதிப்புச் செய்வதும் என்ன நியாயம் என்றும் புரியவில்லை. பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பிலிருந்து எழுதப்பட்ட எத்தனையோ சாட்சியங்கள் வெறும் 30 கிலோ மீற்றர்கள் துாரமுள்ள கடலைக் கடக்க வல்லமையற்றவையா!

யாழ் முஸ்லிம்களின் விரட்டியடிப்பை புலிகள் மற்றும் புலிகளின் தரப்பைச் சார்ந்தவர்களே பின் நாட்களில் பிழை கண்டது வரலாறு. அவர்கள் அந்த தவறை இழைக்கும் போதோ,  அல்லது அதன்பிறகு அதனை பிழைகண்டபோது ‘ஜெப்னா பேக்கரி’ ஆசிரியர் குறிப்பிடுவது போன்று முஸ்லிம்கள் படையினரோடு சேர்ந்து செயற்பட்டதால் தான் விரட்டியடித்தோம் என்று எந்த ஒரு குற்றச்சாட்டையும் முஸ்லிம்கள் மீது முன்வைக்கவில்லை. அப்படியிருக்கையில் மேற்படி நூலாசிரியர் போருக்கு பின்னைய சூழலில் இப்படியொரு ஆதரமற்ற குற்றச்சாட்டை தனது நாவலினூடாக முன்வைப்பதன் பின்னணி என்ன என்பது புரியவில்லை.

ஒரு பொய்யான நூலை எழுதியவருக்கு விருது வழங்கி அந்நுாலை அங்கீகாரம் செய்வதையும் அதன் வழியே முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்தவதையும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இதன் கீழ் கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

-Ahmed Seylani-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *