• Sun. Oct 12th, 2025

“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்

Byadmin

Mar 5, 2018

(“நல்லாட்சியை நம்பிய முஸ்லிம்கள் செல்லாக் காசாக ஆக்கப்பட்டுள்ளனர்” – ரிஷாட்)

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ​அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியவர்கள் பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய சம்பவம் இதனையே உணர்த்துகின்றது என்றார்.

பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவமாக அம்பாறை நாசகாரச் செயலைக் காட்டி, நீதிமன்றத்தை பிழையாக வழிநடாத்தி, நாசகார சக்திகளுக்கு பிணையை பெற்றுக்கொடுத்த பொலிஸாரையும், அதற்குத் துணை நின்ற அரசாங்கத்தையும் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் உள்ள பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் ஆசியுடனும், பொலிஸாரின் வழி நடாத்தலுடனும் இந்தப் பிணை வழங்கும் சம்பவம் நன்கு சோடித்து, மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் மீதான இந்த நாசகாரச் செயலை இனவாத சம்பவம் கிடையாது எனவும், இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை எனவும் பொலிஸார் நாக்கூசாமல், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தைப் பேண வேண்டியவர்கள், மக்களைப் பாதுகாப்பவர்கள் இவ்வாறு கேவலமாக நடந்துகொண்டிருப்பது, நல்லாட்சி அரசின் ஓட்டைகளையே வெளிப்படுத்தியுள்ளது.

மனுதாரரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தும், நல்லாட்சி அரசாங்கத்தின் காவலர்கள் இவ்வாறு நடந்துகொண்டிருப்பது சட்டத்தை மதிப்பவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இனவாதிகளின் மிரட்டல்களுக்கும், பௌத்த மதகுருமார்களின் அச்சுறுத்தல்களுக்கும் நல்லாட்சி அரசாங்கம் பயந்து, பொலிஸாரின்ஊடாக இவ்வாறான கைங்கரியத்தை செய்திருப்பது, அவர்களை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டுவந்த சிறுபான்மை மக்களுக்கு கன்னத்தில் அறைவது போன்று இருக்கின்றது.

வெளிப்படையாகவும், தெளிவாகவும் தெரிந்த ஓர் இனவாத அட்டகாசத்தை மறைத்து, நீதிமன்றத்தை பிழையாக பொலிஸார் வழிநடாத்தி இருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களிலும் இனவாத பௌத்த தேரர்களின் வெளிப்படையான அட்டகாசங்களையும், அட்டூழியங்களையும் மறைத்து பொலிஸார், பிணை வழங்கி இருக்கின்றனர்.

இப்போது, இனவாத மதகுருமார்களே நல்லாட்சியை வழிநடாத்துவது வெளிப்படையாக வெட்டவெளிச்சமாகி உள்ளது. அரசாங்கம், முஸ்லிம்கள் மீதான இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களை கண்டும்காணாதது போல் இருந்தால், அதன் விளைவுகளை அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *