(புலிகளை அழித்தவர்களுக்கு ஏன் சிறிய குழுவை அடக்க முடியவில்லை – முஜிபுர் ரஹ்மான் கேள்வி)
விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்த இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கலவரத்தில் ஈடுபடும் சிறிய குழுவை ஏன் கைது செய்ய முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அடிப்படைவாதிகளுடன் விளையாட அரசாங்கத்தை அமைக்கவில்லை. வன்செயல்களின் பின்னணியில் அரசியல் செயற்படுத்தப்படுகிறது என்பதை அரசாங்கம் அறியும்.
எப்படி அரசியல் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கே உள்ளது.
சிறிய தரப்பினர் பல மணிநேரம் தமது கையில் சட்டத்தை எடுத்துக்கொண்டு மனித உயிர்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துக்களை அழிக்கும் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமையில் கீழ் பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும். வன்முறைக்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.
சுதந்திரமாக வாழவே நாங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினோம். எனினும் அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாது போயுள்ளது. இதனால், உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.
இரண்டரை வருடங்களாக மிகவும் சிரமமாக கட்டியெழுப்பப்பட்ட அனைத்தும் அழிந்து வருகிறது. நாடு மீண்டும் அராஜக நிலைக்கு செல்ல விட்டு அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இதுவே எமக்கு கவலையளிக்கின்றது.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு எமக்கே இழப்பீட்டை செலுத்த நேரிட்டுள்ளது. பிரதமர், ஜனாதிபதி ஆகிய இருவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான்கு றிப்பிட்டுள்ளார்.