(உதயங்கவை இந்நாட்டிற்கு ஒப்படைப்பது குறித்து துபாய் அரசு மௌனம்)
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க துபாயில் கைது செய்யப்பட்டு, இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில், வீரதுங்கவை நாட்டிற்கு ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று(09) வரையில் துபாய் அரசினால் எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என பொலிஸ் தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச பொலிஸாருக்கு அனுப்பி வைக்கும் வகையில், ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதவானிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கு அமைய, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அதிகாரிகளும் இலங்கை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் கடந்த 24ம் திகதி உதயங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கை விமானப்படைக்கு யுக்ரைன் நாட்டிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.