(கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த முஸ்லிம் பணிக்கரும் 1000 ரூபாவும்..!!)
-என்.எல்.எம்.மன்சூர்-
குருணாகல் சியம்பலாகஸ்கொடுவ “கடுபொல” என்ற இடத்தின் அண்மையில் பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு பௌத்த மதம் சார்பான பதவியுயர்வொன்று வழங்கப்பட்டது. அவரை கௌரவித்து வரவேற்பும், பாராட்டு வைபவங்களும் இடம் பெற்றன. அவ்வாறான வரவேற்பொன்று முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் சார்பாக நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்வை ஏற்று நன்றி தெரிவித்து விகாராதிபதி ஏற்புரை நிகழ்த்தும் போது முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றை ஆதாரங்களுடன் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
“இலங்கை முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் விசுவாசமாக இணைந்து வாழ்ந்ததுடன் பௌத்த மதத்தையும், பௌத்த பிக்குமார்களையும் கண்ணியமாக மதித்து மதிப்பளித்து வந்துள்ளார்கள் என்பது மறக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
குறிப்பாக தலதா மாளிகைக்கு கொம்பன் யானைக்குட்டியை ஏறாவூரைச் சேர்ந்த பணிக்கர் அன்பளிப்புச் செய்தார். அந்த யானை ஐந்து நாட்களுக்குள் மீண்டும் ஏறாவூருக்கே திரும்பி சென்று விட்டது. இந்த ஆச்சரியமான விடயத்தை அறிந்த பணிக்கர் மீண்டும் அந்த யானையை அழைத்துச்சென்று தலதா தியவதன நிலமேயிடம் ஒப்படைத்தார்.
அப்போது இந்த யானை திரும்பவும் ஏறாவூருக்கே போய்விடுமோ என்று நாங்கள் கருதுவதால் நீங்களே கொண்டு போய்விடுங்கள். என்று தலதா அதிகாரிகள் கூறிய போது முஸ்லிம்கள் கொடுத்ததை திரும்ப எடுத்துக் கொள்ளும் பழக்கமே இல்லாதவர்கள் என்று கூறி ஒப்படைத்துச் சென்றார் எனக் கூறினார்.
இந்த தகவலை சியம்பலாகஸ்கொடுவ பள்ளிவாசல் நிருவாகிகளில் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
எனவே இத்தகைய முக்கியமான வரலாற்று நிகழ்வை எமது ஊரின் மூத்த தலைமுறையினரிடமிருந்தும் ஏறாவூர் வரலாற்று நூலிலிருந்தும் கிடைத்த விடயங்களை ஒழுங்கமைப்பது இன்றைய இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையுமென்று நினைக்கிறேன்.
அமைவிடம்
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஏறாவூர், மட்டக்களப்பின் வடக்கே 12 கி.மீ தொலைவிலுள்ளது. இயற்கை அழகும் இனிய வளமும் கொண்ட இவ்வூர் வடக்கே வங்கக் கடலையும் கிழக்கே குடியிருப்பையும் மேற்கே செங்கலடியையும் தெற்கே மட்டக்களப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. நாட்டின் எல்லாப் பாகங்களுடனும் இலகுவாக போக்குவரத்து செய்யக்கூடிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதே இதன் சிறப்புக்கு காரணமாகும்.
பெயர் வரக்காரணம்
மட்டக்களப்பின் ஆதிக்குடி திமிலர்களாகும். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் முக்குவர்கள். இந்த இருபிரிவினருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட திமிலர்கள் முக்குவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். இக்காலத்தில் ஆப்கானிஸ்தான், வட இந்தியா போன்ற இடங்களிலிருந்து வியாபாரத்திற்காக வந்ததாகக் கருதப்படும் பட்டாணியர்களின் உதவியை முக்குவர்கள் நாடினார்கள்.
இந்தப் பட்டாணியர் சிவந்த நிறமும் பருத்த உடலமைப்பும் திடகாத்திரமான தோற்றமும் கொண்ட பலசாலிகளாக இருந்தார்கள். முக்குவர்கள் பட்டாணியர்களுடன் இணைந்து திமிலர்களைத் துரத்தியடித்தார்கள். விரட்டியடித்ததோடு மட்டுமன்றி படைகளையும் காவலரண்களையும் அமைத்து நிரந்தர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தனர். இப்பாதுகாப்பு அரண்கள் கூடுதலாக ஏறாவூர் பிரதேசத்திலேயே அமைந்திருந்தன. அதனால் எதிரிகள் அவ்வூருக்குள் நுழையமுடியாதிருந்தது. அதனாலேயே எதிரிகள் ஏறமுடியாமல் தடுத்த ஊர் என்ற பொருள்பட “ஏறாவூர்” என அழைக்கப்படுகிறது.
பணிக்கர்களின் முக்கியத்துவம்
யானைகளைப் பிடித்து அதனை கட்டுப்பாட்டுடன் வளர்த்து பின்னர் வெளியூருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதை தொழிலாகக் கொண்டவர்களே பணிக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த யானைகளை கயிறுகளால் சுருக்கிட்டுப் பிடிப்பார்கள். கயிறுகளை உறுதியான கொடிகளில் கட்டிவைப்பார்கள். பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியே யானைகளைப் பிடிப்பார்கள்.
காட்டின் நாலாபுறமும் தீப்பந்தங்களைப் பிடித்து யானைகளை ஒரே இடத்தில் ஒன்றுசேர்த்து கொம்பன் யானைகளை துரத்திச் சென்று சுருக்கிட்டுப்பிடிப்பது அவற்றில் ஓர் உத்தியாகும். இவர்கள் யானைகளைத்தேடி தூர இடங்களுக்கும் செல்வார்கள். அம்பாறை மாவட்டம் இறக்காமம் வரை செல்வது வழக்கம் என அறியமுடிகிறது.
1925 இல் தலதா மாளிகைக்கு யானை வழங்குதல்
1925 இல் ஏறாவூர்ப் பகுதி காடு வனமாக இருந்த போது அப்பகுதிக்காடொன்றில் பிடிக்கப்பட்ட கொம்பன்யானைக் குட்டியை தலதாவுக்கு வழங்கியதன் மூலம் ஏறாவூர் மண்ணும் பணிக்கர் பரம்பரையும் வரலாற்றில் தனிச்சிறப்பைப் பெற்றுக் கொண்டது. ராஜா என அழைக்கப்பட்ட கொம்பன் யானைக்குட்டி 4 அடி 5 அங்குல உயரம் கொண்டது. இந்த யானை தலதாவுக்கு வழங்கப்பட்ட பின் தன்னைப் பிடித்து வளர்த்த உமறுலெவ்வை பணிக்கரைத் தேடி ஏறாவூருக்கே திரும்பி வந்து விட்டது.
அதனை மீண்டும் பல சிரமங்களுக்கு மத்தியில் உமறுலெவ்வை பணிக்கர் தலதாவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.1937 ஜூலை மாதம் தலதா மாளிகையின் தியவதன நிலமேயாயிருந்த ரீ.பீ.ரத்வத்தை என்பவரிடமே அன்பளிப்புச் செய்யப்பட்டது.
தேசிய சொத்தாகப் பிரகடனம்
1984 இல் தியவதன நிலமேயாக இருந்த நிஸங்க விஜேரத்னவின் ஆலோசனையின் பேரில் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவால் கொம்பன்யானை ராஜா, தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாறு ஒரு யானை தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்படுவது உலக வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
வருடந்தோறும் நடைபெறும் கண்டி எசல பெரஹராவில் ராஜா யானை கம்பீரமாக பவனி வருவதால் தேசிய ரீதியாக பெருமதிப்பைப் பெற்றது. தனது ஐம்பது வருட சேவையின் பின் 15.07.1988 இல் உயிர் நீத்தது. தியவதன நிலமே ரஞ்சன் விஜேரத்னவின் அபிப்பிராயப்படி ராஜாவின் உடல் பாதுகாக்கப்பட்டு பிரத்தியேகமான அரும் பொருட் காட்சியகமொன்றில் வைக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.
ராஜாவின் உடல் அரும்பொருட்காட்சியகத்தில்
யானை உடலில் உள்ள பாகங்கள் துப்பரவு செய்யப்பட்டு பஞ்சு போன்ற பழுதடையாத பொருட்கள் உள்ளே அடைக்கப்பட்டு ராஜா உடலை பாதுகாப்பதற்கான வேலைகள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான முழுச் செலவும் அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஆர்.பிரேமதாஸவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதி நிதியிலிருந்து பெறப்பட்டது.
இந்த அரும் பொருட்காட்சியகம் பிரதம மந்திரியாக இருந்த டீ.பி.விஜேதுங்கவால் திறந்து வைக்கப்பட்டது.
ஆயிரம் ரூபா நாணயத்தாள்
ராஜா யானையின் மதிப்புக் காரணமாக, ராஜா யானையையும் அதனைப் பராமரித்து வளர்த்து தலதாவுக்கு வழங்கிய உமறு லெவ்வைப் பணிக்கரையும் கௌரவிக்கும் வகையில் யானையுடன் பணிக்கர் நிற்கும் படத்தையும் ஆயிரம் ரூபா நாணயத்தாளில் பதித்திருப்பதையும் ஏறாவூருக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதவேண்டும்.
1989 டிசம்பர் 12 இல் ராஜா யானையைச் சிறப்பிக்கும் அஞ்சல் முத்திரை யொன்றும் வெளியிடப்பட்டது.