• Sat. Oct 11th, 2025

முஸ்லிம்களின் கடை எரிப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை! பொதுபலசேனா

Byadmin

Jun 12, 2017

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கும் தமது அமைப்புக்குமிடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், நாட்டில் இடம்பெறும் சம்பவங்களையெல்லாம் பொதுபலசேனாவின் மீது திணிப்பதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிக்கின்றனர் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலாந்த விதானகே குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களுடன் பொதுபலசேனா அமைப்பை தொடர்புபடுத்தி வெளியாகும் தகவல்களை நிராகரிக்கும் வகையில் அவ்வமைப்பின் முகநூலில் காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் டிலாந்த விதானகே மேலும் கூறியுள்ளவை வருமாறு,

“ஞானசார தேரரை குருநாகலில் வைத்துக் கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதன்பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அழுத்தத்தின் பேரில் அவரை கைது செய்வதற்குரிய முயற்சி தொடர்கின்றது. இதையிட்டு கவலையடைகின்றோம்.

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதுதான் எமது கொள்கையாக இருக்கின்றது. ஆனால், சில முஸ்லிம் அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள், ஏனைய சில அரசியல்வாதிகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் தூண்டுதலில் தற்போது இடம்பெற்றுவரும் செயற்பாடுகளுக்கு ஞானசார தேரர் மற்றும் பொதுபலசேனாவினர் தான் காரணம் என்று முத்திரைக் குத்தப்படுகின்றது. இதனை நாம் நிராகரிக்கின்றோம்.

கடைகளுக்குத் தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரும் பொதுபலசேனாவின் உறுப்பினர் என்று கூறப்படுகின்றது. இது பொய்யாகும்.

எமது அலுவலகத்துக்கு வருகை தருவோர் அனைவரும் எமது உறுப்பினர் என எவ்வாறு கூறுவது? அஸாத் சாலியின் சகோதரியும் ஒருமுறை உதவி கோரி வந்தார். அதேபோல, பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் பேச்சு நடத்த அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் எமது அலுவலகத்துக்கு வந்தார். அப்படியானால் இவர்களும் எமது உறுப்பினர்களா?

எமது அலுவலகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அத்தோடு, நாம் நடத்திய கூட்டங்களுக்கு இதுவரை 4 இலட்சத்துக்கும் அதிகமானோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் எமது உறுப்பினர்கள் என்று கூறமுடியுமா?

அந்தவகையில், ஞானசார தேரரையும் பொதுபலசேனாவையும் வேண்டுமென்றே இழிவுக்குட்படுத்தும் செயற்பாடுகள்தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில், தற்போது நடைபெறும் சம்பவங்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்த எமக்கு பலமும் அதிகாரமும் தற்போது காணப்பட்டாலும் நாம் அதனை ஒருபோதும் மேற்கொள்ளமாட்டோம் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *