• Sat. Oct 11th, 2025

கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி

Byadmin

Apr 23, 2018

(கடைசி பந்தில் பிராவோவுக்கு அறிவுரை வழங்கிய டோனி)

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.

ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. அம்பதிராயுடு 37 பந்தில் 79 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), ரெய்னா 43 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் டோனி 12 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.

கேப்டன் வில்லியம்சன் 51 பந்தில் 84 ரன்னும் (5 பவுண் டரி, 5 சிக்சர்), யூசுப்பதான் 27 பந்தில் 45 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். தீபக் சாஹர் 3 விக்கெட்டும், பிராவோ, சரண்சர்மா, ‌ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஐதராபாத் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன்னே கொடுத்தார். இதனால் 3 பந்தில் 16 ரன் தேவைப்பட்டது. 4-வது பந்தில் ரஷீத்கான் சிக்சர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் கேப்டன் டோனி பிராவோ அருகே வந்து எப்படி வீச வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். 5-வது பந்தில் ரஷீத்கான் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது.

இந்த பந்தில் அவர் சிக்சர் அடித்து விடுவாரோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பிராவோ யார்க்கர் வீசி 1 ரன்னே கொடுத்தார்.

பிராவோவுக்கு அறிவுரை வழங்கியது தொடர்பாக டோனி கூறியதாவது:-

அனுபவ வீரராக இருந்தாலும் பிராவோவுக்கு சில நேரம் ஆலோசனை தேவைப்படுகிறது. 2 பந்துகள் இருக்கும் போது அவரிடம் சென்று திட்டத்தை மாற்ற சொல்லி ஆலோசனை வழங்கினேன். வேறு மாதிரி போட சொன்னேன். அதனால்தான் வெற்றி பெற முடிந்தது. தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டியது முக்கியம்.

அம்பதிராயுடுவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. எந்த வரிசையில் களம் இறங்கினாலும் நம்பிக்கையுடன் ஆடுகிறார். அவரை தொடக்க வீரராகவே பார்க்க விரும்புகிறேன். தொடக்க வரிசையில் அவர் அபாயகரமானவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை அணி பெற்ற 4-வது வெற்றியாகும். இதன் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. சென்னை சூப்பர்கிங்ஸ் 6-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியுடன் 25-ந்தேதி மோதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *