(தொப்பிக்காக பிரிட்டிஷாருடன் போராடிய முஸ்லிம்கள், அபாயாவை விட்டுக் கொடுப்பார்களா?)
துருக்கித் தொப்பிக்காக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் சட்ட ரீதியில் சாத்வீகமாக போராடி வென்ற அப்துல் காதர்களை முன்னோராக கொண்ட சமூகம் அபாயா அவமதிப்பை அவ்வளவு இலேசாக விடுவார்களா என்ன…?
துருக்கித் தொப்பிப் போராட்டம்,
1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில் ஒரு வழக்கில் ஆஜரானார்.
அப்போது அவர் அவ்வாறு அந்த வழக்கில் வாதாடுவதை எதிர்த்த நீதியரசர் லாயட் நீதிமன்றுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் அணிந்திருந்த துருக்கித் தொப்பியை அல்லது காலணியை கழற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் .
அப்போது தொப்பி அணிந்து வாதாடுவது தான் நீதிமன்றுக்கு செய்யும் இஸ்லாமிய மரியாதை எனவும் அதனை கழற்ற முடியாது என மறுத்து சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேறினார்.
அவரது துணிகரமான இச்செயல் மூலம் தனது தொழிலை விடவும் சமூக உரிமை காப்பதின் கடமைப்பாட்டை உணர்த்தியதோடு விளிப்பற்றிருந்த சமூகத்தினை செயலாற்றவும் செய்தது.
இவ்விடயமனது அன்றைய சோனக சங்கத் தலைவரான ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்களை எட்டியபோது அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து மரபுரிமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தினார் .
இது இவ்வாறு இருக்கும்போது நீதியரசர் லாயட்டின் விடாப்பிடியான வலியுறுத்தலின் பெற்றாக 1905ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி துருக்கித் தொப்பி அணிந்து வாதாடுவது தடுக்கப்பட்டதாக சட்டமாக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக 1905ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அறிஞர் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.
அக்குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர்
01.ஜனாப் எம் எல் எம் ஸைனுதீன் ஹாஜியார் 02.ஜனாப் முஹம்மது மாக்கான் மாக்கார் 03. ஜனாப் ஐ எல் எம் அப்துல் அஸீஸ் 04.ஜனாப் எஸ் எல் எம் மஹ்மூது ஹாஜியார் (சமாதான நீதிவான்) 05.ஜனாப் ஐ எல் எம் எச் நூர்தீன் ஹாஜியார் 06 ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ 07.ஜனாப் எஸ் எஸ் நெய்னா மரிக்கார் ஹாஜியார் 08.ஜனாப் சீ எம் மீராலெப்பை மரிக்கார் 09.ஜனாப் ஏ எல் அப்துல் கரீம் 10.ஜனாப் ஓ எல் எம் மரிக்கார் ஆலிம் சாஹிப் 11.ஹாஜி பின் அஹமது 12. ஜனாப் எம் ஐ முகம்மது (சமாதான நீதிவான்) 13.ஜனாப் ஐ எல் எம் மீரா லெப்பை மார்க்கர் 14.ஜனாப் என் டீ எச் அப்துல் கபூர் 15.ஜனாப் பீ ரீ மீராலெப்பை மரிக்கார் 16.ஜனாப் என் ரீ எம் பக்கீர் 17.ஜனாப் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் சாஹிப் 18.ஜனாப் இப்ராகிம் சாஹிப் 19.ஜனாப் எம் கே எம் முஹம்மது ஸாலிஹ் 20.ஜனாப் எம் ஏ கச்சி முஹம்மது 21. ஜனாப் பீ பீ உம்பிச்சி
இப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்துவதற்காக நாட்டின் முக்கிய பிரதேசங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதன் முதன்மைக் கூட்டம் கொழும்பு மருதனை பள்ளிவாயல் முற்றவெளியில் 1905ம் ஆண்டு டிசம்பர் மதம் 31ம் நாள் ஜனாப் கெளரவ டபிள்யு எம் அப்துல்ரஹ்மான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது
இக்கூட்டத்தில் குழு உறுப்பினரான ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்களின் ஆலோசனையின் பேரில் வாரவலைக்கப்பட்ட இந்தியாவின் புகழ் பெற்ற பரிஸ்ட்டரான மௌலவி ரபியுதீன் அஹமது சிறப்புரை நிகழ்த்தினார். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரம் ஒன்று திரண்டிருந்தனர் .
இப்போராட்டத்தில் சமகால முஸ்லிம்களின் பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், மித்திரன் முஸ்லிம் பாதுகாவலன், போன்றன சரியான பங்களிப்பை செய்தன என்பதும் இங்கு குறிப்பிட தக்க விடயம்.
சமூக ஒற்றுமையினாலும் முஸ்லிம் தலைமைகளின் துணிகரமான சமூகப்பற்றுள்ள முடிவுகளாலும் வெற்றி பெற்று, முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்ட இயற்றப்பட்டது.
-Mohamed Ali Yaseer Arafath-