மாவனல்லை நகரில் முஸ்லிம்களுக்கெதிராக 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் அரனாயக்க பிரதேசத்துக்கு பரவாமைக்கு காலஞ்சென்ற ஸகி மௌலானாவின் பங்களிப்பு முக்கியமானது என அரனாயக்க பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விஜேசிங்க தெரிவித்தார்.
அரனாயக்க பிரதேச சபை உறுப்பினராக நீண்ட காலம் பணிபுரிந்த எம்.எஸ்.எம்.ஸகி மௌலானாவின் மறைவு குறித்து இரங்கலுரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வில்பொலை ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகைக்கு முன்னர் மர்ஹூம் மௌலானாவின் மறைவு குறித்து விஜேசிங்க உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
மௌலானா இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பு செய்தவர். அவர் இன நல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக நிகழ்ந்தவர். அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் பிரதேச சபைக்கு தெரிவானவர். மௌலானா அஞ்சல் அதிபராக பணியாற்றியபோது இப்பிரதேச மக்களுக்கு போதிய மொழியாற்றல் இருக்கவில்லை. அவர் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
தந்தியொன்று வந்தாலும் அவரிடம் எடுத்துச் சென்று அதன் விளக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். மக்களுடன் மிக நெருங்கி செயற்பட்ட மிக நேர்மையான அரசியல்வாதியாகவும் அவர் திகழ்ந்தார்.
வெளிநாடு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோரின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
வெள்ளியன்று காலமான மர்ஹூர் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் சனியன்று வில்பொலை மையவாடியில் பெருந்திரலானோரது பிரசன்னத்தோடு இடம்பெற்றது.
முன்னாள் அமைச்சர் யூ.எப்.எம். பரூக் உட்பட முஸ்லிம் முஸ்லிம் மக்களுடன் பெருந்திரளான சிங்கள மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.