உபதேசங்கள் நிகழ்த்தும் சங்கைமிகு ஆலிம்கள், ஸஹர் நேர நிகழ்ச்சிகளை நடாத்துவதைத் தவிர்த்து அந்நேரத்தில் மக்களுக்கு அமல்கள் செய்வதற்கு நேரங்களைக் கொடுத்தால் பொருத்தமானதாகும்.
ஸஹர் நேர நிகழ்ச்சிகளின் காரணமாக மக்கள் Tv மற்றும் Radio க்களின் அலைவரிசைகளைப் பிடிப்பதிலும் நிகழ்ச்சிகளை செவிமடுத்து, கண்டுகளிப்பதிலும் ஈடுபட்டால் எப்பொழுது அல்லாஹ் ஸஹரில் செய்யும் படி வர்ணனைகளாக கூறியவற்றையும் நபியவர்கள் செய்து காட்டியவற்றையும் செய்ய முடியும்?
நாள்தோறும் இப்தார் நேரத்திலும் விஷேட நிகழ்ச்சி, பிறகு தராவீஹுக்குப் பின்னும் விஷேட நிகழ்ச்சி என்று தொடர்ந்து பயான்களாகவும் உபதேசங்களாகவும் இருக்கும் பட்சத்தில் ஸஹரிலும் இந்நிலை தொடர்ந்தால் மக்கள் எந்நேரத்தில் தான் அமல்கள் செய்வார்கள்? எந்நேரத்தில் தான் அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனைகள் புரிவார்கள்?!
மக்களில் பெரும்பாலானோர் நோன்பு கால இரவுகளில் மாத்திரம் தான் அமல்கள் செய்ய முனைகின்ற பொழுது, அவர்களை தொடந்து Bபயான்களை மாத்திரம் கேட்பதற்காக அமர்த்தி அமல்கள் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்காமலிருப்பது கைசேதமும் வருந்தத்தக்கதொரு விடயமுமாகும்.
மக்களுக்கு இந்த ரமலானின் ஸஹர் நேரத்திலாவது அமல்கள் செய்ய சந்தர்ப்பம் வழங்குமாறு, ஸஹர் நேரத்தில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் குறிப்பாக உபதேசம் புரியும் அனைத்து ஆலிம்களிடமும் வினயமாக வேண்டுகிறேன்.
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
“وبالأسحار هم يستغفرون”
“அவர்கள் விடியற் காலைகளில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.”
மக்களாகிய அனைவரும் இது குறித்து விழிப்படைவதும் தெளிவு பெறுவதும் கடமையாக இருப்பதோடு இந்த பருவ காலத்தின் ஸஹர் நேரங்களை அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனைகள் புரியும் சந்தர்ப்பங்களாகவும் நல்லமல்கள் செய்யும் தருணங்களாகவும் ஆக்கிக் கொள்ள முயல்வதே புத்திசாலித்தனமாகும்.
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா