• Sat. Oct 11th, 2025

பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் பதிலடி- பந்து வீச்சாளர்களுக்கு ரகானே பாராட்டு

Byadmin

May 9, 2018

(பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் பதிலடி- பந்து வீச்சாளர்களுக்கு ரகானே பாராட்டு)

ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது.

தொடக்க வீரர் பட்லர் 58 பந்தில் 82 ரன் (9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அவர் ஒருவரே அந்த அணிக்காக அபாரமாக ஆடினார். அதற்கு அடுத்தப்படியாக சாம்சன் 18 பந்தில் 22 ரன் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரூடை 4 விக்கெட்டும், முஜிப் ரகுமான் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 15 ரன்னில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஒருவர் மட்டுமே அந்த அணிக்காக கடைசி வரை போராடினார். அவர் 70 பந்தில் 90 ரன் (11 பவுண் டரி, 2 சிக்சர்) எடுத்தார். கிருஷ்ணப்பா கவுதம் 2 விக்கெட்டும், ஜோப்ரா அர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், பென்ஸ்டோக்ஸ், சோதி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி நேற்று முன்தினம் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதற்கு நேற்றைய ஆட்டத்தில் வென்று ராஜஸ்தான் சரியான பதிலடி கொடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ரகானே கூறியதாவது:-

160 ரன்னை இலக்காக நிர்ணயித்தது நல்ல ஸ்கோராக நினைக்கிறேன். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது கடினமாக இருந்தது. எங்களது இந்த வெற்றிக்கு சிறப்பான பந்து வீச்சே காரணம். ஜோப்ரா தொடக்கத்திலேயே சிறப்பாக வீசினார். குறிப்பாக பவர் பிளேயில் எங்களது பவுலர்கள் அபாரமாக செயல்பட்டனர்.

தொடக்கத்திலேயே 2 முதல் 3 விக்கெட்டை கைப்பற்றியது முக்கியமானது. எங்களது நோக்கம் விக்கெட்டை வீழ்த்துவதாக இருந்தது. சோதியும், கவுதமும் நன்றாக செயல்பட்டனர். ஒட்டு மொத்தத்தில் எங்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் அணி சந்தித்த 4-வது தோல்வியாகும். தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

நாங்கள் 8 ரன்னுக்கு மேல் அதிகமாக கொடுத்ததாக நினைக்கிறோம். ஆனாலும் 160 ரன் எடுக்க கூடிய இலக்குதான். தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிட்டதால், தோல்வி ஏற்பட்டது. ஒரு பரிசோதனைக்காகவே நான் 3-வது வீரராக களம் இறங்கினேன்.

இந்த தோல்வியால் நாங்கள் அதிகமாக கவலைப்படவில்லை. ஏனென்றால் 10 போட்டியில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜஸ்தான் அணி 11-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 11-ந்தேதியும், பஞ்சாப் அணி கொல்கத்தா நைட்ரைடர்சை 12-ந்தேதியும் சந்திக்கின்றன. #IPL2018 #RRvKXIP #Rahane

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *