• Wed. Oct 15th, 2025

இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம்

Byadmin

May 10, 2018

(இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம்)

‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 – 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய சாப்பிடுவதும், இதற்கு முக்கிய காரணங்கள். கணையத்திலிருந்து சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்ல; உடல் உள்இயக்கம் சீராக இருப்பதற்கும் தேவை.

சினைப்பையில், நிறைய கருமுட்டைகள், மாதந்தோறும் உருவாகும். அதில், முழு வளர்ச்சி அடைந்த ஒரு முட்டை உடைந்து, ஒவ்வொரு மாதமும் வெளிவருகிறது. கருமுட்டை, குறிப்பிட்ட நாளில் முழுமையான வளர்ச்சி அடைய, இன்சுலின் சுரப்பு சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், முழு வளர்ச்சி அடையாத கருமுட்டைகள், நீர்க்கட்டிகளாகி தங்கிவிடுன்றன.

இதனால், டீன் பருவத்தில், சீரற்ற மாதவிடாய் வருகிறது. ‘ஆண்ட்ரோஜென்’ என்ற ஆண் உடலில் சுரக்கும் ஹார்மோன், பெண்ணின் உடலிலும் சுரக்கும். வழக்கத்தைவிடவும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால், கருமுட்டைகள், முழுமையாக வளர்ச்சி அடைவதைத் தடுக்கும். கருமுட்டை, உடைந்து வெளியில் வருவதிலும் சிக்கல் ஏற்படும். குறிப்பிட்ட இந்த ஹார்மோன் அதிகமாக சுரப்பதற்கு காரணம், இன்சுலின் அளவு அதிகமாக இருப்பது.

இந்த ஹார்மோன், அளவுக்கு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் இன்னொரு பிரச்சனை, டீன் பருவப் பெண்களுக்கு உடல் முழுவதும், குறிப்பாக, மேல் உதடு, மேல் கை, கால், வயிற்றுப் பகுதியில் முடி வளரும். முகத்தில் பருக்கள் தோன்றும். தலையின் முன் பக்கத்தில் முடி உதிரும். உடல் பருமனும் அதிகரித்துக் கொண்டே போகும். டீன் பருவத்தில் ஏற்படும் இந்த பிரச்சனையால், 20 வயதிற்கு மேல், திருமணம் ஆன பின், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 30 வயதில், நீரிழிவு பிரச்சனை, கொழுப்பு அதிகமாகுதல் ஏற்பட்டு, இதன் விளைவாக, பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து, 50 வயதில், பெண்களுக்கு, ‘ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக்’ போன்றவை வர வாய்ப்பாகி விடுகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்தப் பிரச்சனையை சரி செய்ய முடியும். உடல் பருமனைக் குறைக்க, முறையான வழிமுறைகளையும், சரியான உணவு பழக்கங்களையும் பின்பற்றுவது முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *