• Sun. Oct 12th, 2025

முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான, விசேட விடுமுறை

Byadmin

May 18, 2018

(முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான, விசேட விடுமுறை)

புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தங்களது தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட விடுமுறை ஒழுங்குகளைச் செய்யுமாறு அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் அரச கூட்டுத்தாபன மற்றும் நியதிச்சட்டசபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு 06.2018 ஆம் இலக்க இச்சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் யூன் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இவ்விசேட நடைமுறை ஒழுங்குகள் செல்லுபடியானதாகவிருக்குமென அரசாங்க நிருவாக மற்றும்  முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்துள்ளார்.
தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபடுவதற்கு வசதியாக நாளாந்தம் காலையிலும் மாலையிலும் பின்வரும் நேர ஒழுங்கின்படி வசதிகள் வழங்கப்படமுடியும். அதற்கேற்ப வேலை நேரங்களை மாற்றியமைக்கலாம். தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டுமே விசேட விடுமுறை அங்கீகரிக்கப்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மு.ப. 3.30 – மு.ப. 6.00 மணி வரை
பி.ப. 3.15 – பி.ப. 4.15 மணி வரை
பி.ப. 6.00 – பி.ப. 7.00 மணி வரை
பி.ப. 7.30 – பி.ப. 10.30 மணி வரை
மதவழிபாடுகள் தொழுகைகள் இடம்பெறுவதால் அதற்கேற்ப வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரமழான் பெருநாளின் இறுதித்திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரசசேவை,  கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்டசபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளர் ரத்னசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *