நாட்டில் திட்டமிட்டு இனவாத சூழலொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகள், இலங்கை தேசத்தின் மீது பற்றும் நாட்டின் நலன் மற்றும் இன ஐக்கியத்திற்காக உழைத்த ரி.பி.ஜாயாவின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் தம்பர அமிலதேரர் தெரிவித்தார்.
அத்துடன் சிங்கள அரசியல் தலைமைகள் தேசபிதா டி.எஸ்.சேனநாயக்கவிடம் இன நல்லிணக்கம் குறித்து அதிக மாக கற்கவேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புரவெசி பலய அமைப்பினர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தம்பர அமில தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலில் ஐம்பதுக்கு ஐம்பது என சம அந்தஸ்த்து கேட்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழப்போர் இறுதியில் முள்ளிவாய்க்காலில் முடிந்த சோகத்தை நினைவுகொள்ள வேண்டும்.
இவற்றுக்கு பிரதான காரணம் நாட்டின் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் ரி.பி.ஜாயா போன்றோர் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்கும்போது பொறுப்புடன் இன ஐக்கியத்திற்கான இட்ட அடித்தளம் ஆட்டம் கண்டமையேயாகும்.
நாட்டின் நலனை காக்கும் பொறுப்பு முஸ்லிம் தலைமைகளுக்கும் இருக்கிறது. அதேபோன்று சிங்கள தலைமைகளுக்கும் இருக்கிறது. அவர்கள் அந்த பொறுப்பை சரிவரச் செய்ய வேண்டும்.
சுதந்திரத்திற்கு பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் போனமை எமது பெரும் தோல்வியாகும்.
2015 ஜனவரியில் தேசிய ஒருமைப்பாடை ஏற்படுத்தும் முகமாக இரு தேசிய கட்சிகளும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்தியது. நாட்டில் இன ஒற்றுமையை ஒருவாக்கி தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதாக உறுதியளித்தே மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆட்சியை கைப்பற்றினர்.
எனினும் பொதுபலசேனா, சிங்கள ராவய உள்ளிட்ட அமைப்புக்கள் அதனை சீர்குலையச் செய்கின்றன.
நாட்டில் சிங்கள பெளத்தர்களே முதன்மையானவர்கள் அவர்கள் எப்போதும் மேல் மட்டத்தில் இருக்க வேண்டும் ஏனைய சிறுபான்மையினருக்கு அந்தஸ்த்து வழங்க முடியாது என அவர்கள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறாகும். புத்தரின் போதனைகளுக்கு எதிரானதாகும்.
அதேபோன்று முஹம்மத் நபி அவர்களும் சமூகத்தில் பிரச்சினைகளை தூண்டும் விதத்தில் வழிகாட்டவில்லை. அவர் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இஸ்லாத்தை போதித்தார்.
நாட்டில் இன, மதவாதத்தை தோற்றுவிப்பவர்கள் உண்மையான யேசுவை வணக்குபவனாக இருக்க முடியாது. இப்படி உலகில் சிறந்த வழிகாட்டல்களை தந்திருக்கும் மதங்களை பின்பற்றும் நாட்டில் நாம் வாழ்கின்றோம். இந்த அழகிய கலாசாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
தீவிரவாதம் வேறு இஸ்லாம் வேறு. எல்லா சமூகத்திலும் தீவிரவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதத்துடன் தொடர்பில்லாதவர்கள்.
இந்த விடயத்தை சமூகத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்குமே இருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால் அவரால் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நாட்டில் பலவேறு அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் இனவாதிகளுக்கு துணைபோனமையால் அவரின் ஆட்சியை மக்கள் வீழ்த்தினர்.
இந்த வீழ்ச்சி 2014 இல் அளுத்கமயில் அனவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளில் இருந்து ஆரம்பமானது. இந்த அரசாங்கமும் இனவாதத்தை கட்டுப்படுத்தாவிடின் இவர்களும் வீட்டுக்கு செல்ல நேரிடும்.
ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் இனவாத்தை வைத்து அரசியல் நடத்தியவர்கள் அல்லர். அவர்கள் இன, மதவாதத்திற்கு துணை போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும் சட்டத்தை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவது பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.
பிக்குகளுக்கும் முஸ்லிம் மத தலைவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. அவர்களின் பேச்சில் நளினம் இருக்க வேண்டும். பொதுபலசேனா போன்ற அமைப்பிலிருக்கும் பிக்குகளின் பேச்சு மிகவும் மோசமானதாக இருக்கிறது. கொன்றுவிடுவேன், வெட்டுவேன், குத்துவேன், அடிப்பேன் என்றெல்லாம் பேசுகின்றனர்.
இது நல்லிணக்கத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே இந்நாட்டில் அனைவரும் இலங்கையன் என்ற ரீதியில் தேச ஒருமைப்பாட்டிற்காக பாடுபடவேண்டும் என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சூறாசபை பிரதித் தலைவர் ஜாவிட் யூசுப், நவசமசமாஜகட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் செயலாளர் தஸ்லிம் மெளலவி மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
-SNM.Suhail-