முஸ்லிம்களுக்கு எதிராக மீளவும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்து அழுத்தம் கொடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மாலை கொழும்பிலுள்ள தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள், இது தொடர்பில் சட்டம் நிலைநாட்டப்படாமை, குற்றவாளிகளை கைது செய்வதிலுள்ள இழுத்தடிப்புகள், பொலிசாரின் அசமந்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மக்களின் கவலைகள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் எடுத்துக் கூறினர். இதன்போத கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத செயல்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் தான் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து உரிய அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் முஸ்லிம் சிவில் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் சந்திரிகா குமாரதுங்க மேலும் கருத்து வெளியிடுகையில், சமீப காலமாக மீண்டும் இனவாத சக்திகள் தலைதூக்கியுள்ளமை கவலைதருகிறது. இந்த இனவாத சக்திகளை தோற்கடித்து நாட்டை நல்லிணக்கப்பாதையில் முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே நானும் முன்னின்று இந்த ஆட்சியைக் கொண்டு வந்தேன்.
எனினும் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசாங்கம் தனது கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக நான் கவலைப்படுவதுடன் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பும் கோருகிறேன். எனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது அவற்றை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டு வந்தேன். அதற்கு ஒத்துழைக்காத பொலிஸாரை வீட்டுக்கு அனுப்பினேன்.
இன்று பொலிஸார் தமது கடமையை சரிவரச் செய்யவில்லை என்பது எனக்குப் புரிகிறது. இது வெட்கத்துக்குரியதாகும். பிக்குகளாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி அனைவருக்கும் சட்டம் சமமே. ஞானசாரவை நான் தேரர் என்று அழைக்கமாட்டேன். ஞானசார என்றுதான் கூறுவேன். குற்றவாளிகள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.
நான் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் கவலைகள் தொடர்பாக எடுத்துக் கூறுவேன். சட்டத்தை நிலைநாட்டுமாறும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து சிறையிலடைக்குமாறும் நான் வலியுறுத்துவேன். அதேேபான்று நான் பிரதமரிடமும் இது பற்றிப் பேசுவேன். தமது அரசியல் மற்றும் கட்சி நலன்களை கருத்திற் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாக எவரும் கூற முடியாது. அரசாங்கம் என்பது நாட்டில் வாழுகின்ற சகல மக்களையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக நீங்கள் என்னிடம் தெரிவித்தீர்கள். அது பற்றியும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்துவேன். நாம் எல்லோரும் இணைந்துதான் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம். எனவே இவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு நாம் இடமளிக்க முடியாது. நான் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து தொடர்ந்தும் இந்த விடயங்களில் கவனம் செலுத்த தயாராகவிருக்கிறேன். இதற்காக நாம் விசேட குழு ஒன்றை அமைத்து இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடி அதற்கான செயற்றிட்டங்களை வரைந்து செயற்பட வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இச் சந்திப்பில் பௌத்த சிவில் சமூக பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டு தமது கவலைகளை வெளியிட்டதுடன் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தாமும் முன்னின்று செயற்படத் தயார் எனத் தெரிவித்தனர்.
இச் சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் , அதன் உப தலைவர் ஹில்மி அகமட், சூறா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.
மேலும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பர அமில தேரர், பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்டவர்களும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி –