• Sat. Oct 11th, 2025

போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்

Byadmin

Jan 2, 2019

(போதைப்பொருள் கடத்தல் – பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டதிருத்தம்)

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரங்களில் கடுமையான சட்ட திருத்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நேற்று(01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

“போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த சில மாதங்களாக நாட்டில் தொடர்ச்சியாக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இவையனைத்தும், போதைப் பொருள் பாவனைக்கு எதிரான பாரிய செயற்பாடுகளாகவே கருதப்படுகிறது. இதற்காக, அனைத்துத் தரப்பினருக்கும் நாம் எவ்வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.

போதைப் பொருள் பாவனைக்கு முக்கிய காரணமாக இருப்பது சட்டத்தில் உள்ள குறைபாடேயாகும். எனவே, இதற்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வரவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

நான் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சை தற்போதுதான் ஏற்றுக் கொண்டுள்ளேன். இந்நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாராகவே இருக்கிறேன். மேலும், இந்த விடயம் தொடர்பில் நான் பாதுகாப்புச் செயலாளருடனும் தற்போது கலந்துரையாடியுள்ளேன்.

அந்த வகையில், இரண்டு வாரங்களில் போதைப் பொருட்களுக்கு எதிரான சட்டத்தில், சில கடுமையான திருத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

பெப்ரவரி மாதத்துக்கு முன்னர், இதனை அமைச்சரவையின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணித்துள்ளேன்..” என தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *