(ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவிலான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்)
ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அதிகளவிலான பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அனுப்புவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வெளிநாடுகளில் பணி புரியும் மேல் மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.
இந்த விடயம் பற்றி ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. வெளிநாட்டு தொழிலுக்கான பயிற்சிகளை அதிகரிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள்அனுப்பும் அந்நிய செலவாணி நாட்டுக்கு பாரிய உந்துசக்தியாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நாடாளவிய ரீதியில் 80 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான புலமைப்பரிசில் வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக பிரதமர் கூறினார்.
இதன் மூலம் கூடுதலான சம்பளத்தை ஈட்டலாம். இது பொருளாதார அபிவிருத்தி நடைமுறையை வலுப்படுத்தும் எனவும்அவர் கூறினார். இந்த நிகழ்ச்சி நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் 779 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் உரையாற்றினார். இலங்கையர்கள் முறையான தகைமைகளுடனும் பயிற்சிகளுடனும் வெளிநாடுகளில் வேலை செய்வது அவசியம். வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்கள் தமது பிள்ளைகளோடு இணையத்தின் வாயிலாக இலவசமாக பேசுவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். மிகவும் குறைந்த கட்டணத்தில் சிம் அட்டைகளை விநியோகிப்பது பற்றி செல்போன் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.