• Fri. Oct 17th, 2025

தங்கத்தின் கையிருப்பு வீழ்ச்சி தொடர்பில் மத்திய வங்கி விளக்கம்

Byadmin

Jan 11, 2022

ஒதுக்கு முகாமைத்துவக்கொள்கைகளுக்கு ஏற்புடையவாறான தங்க இருப்புக்கொள்வனவு மற்றும் அவ்வப்போதைய சூழ்நிலைகளில் காணப்படும் தேவைகளுக்கு ஏற்றவாறு சொத்துக்களைத் திரவப்படுத்தல் என்பனவற்றுக்கு அமைவாகவே கடந்த 2021 டிசம்பரில் தங்கத்தின் கையிருப்பு 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் காணப்பட்ட உத்தியோகபூர்வ இருப்பு தொடர்பான தரவுகள் மத்திய வங்கியினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.

அத்தரவுகளின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் கையிருப்பில் 206.8 மில்லியன் டொலர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அலுவல்சார் ஒதுக்குகளின் உள்ளடக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தி மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

எமது பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும் தன்மையுடையதாகவும் நுட்ப செயன்முறையுடையதாகவும் காணப்படுகின்றது.

இது பொதுவாக வெளிநாட்டுச்சொத்துக்கள் உடனடியாகக் கிடைப்பனவாகக்கூடிய வகையில் உள்ளமையினையும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினையும் உறுதிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சொத்துக்களின் உள்ளக்கம், நாணயக்கலவை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், தவணைக்காலம், இலாபத்தன்மை, பாதுகாப்பு போன்ற ஏனைய முதலீட்டுச்சாதனங்களுடன் தொடர்புடைய பண்புகளுக்குப் பொருத்தமான ஒதுக்கு முகாமைத்துவக்கொள்கைகளின் பின்பற்றுகை நாட்டிற்கு நாடு வேறுபடுவதுடன் அவை நாடொன்றின் சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார ரீதியான முன்னுரிமைக்குரிய விடயங்கள் ஆகியவ்றறை சார்ந்ததாகக் காணப்படும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த 2021 டிசம்பர்மாத இறுதியில் காணப்பட்ட பன்னாட்டு ஒதுக்குகளின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருகின்றன. 

நாட்டின் அலுவல்சார் ஒதுக்குகளின் உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒதுக்கு முகாமைத்துவத்தேவைப்பாடுகளின் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு, தற்போதைய ஒதுக்கு முகாமைத்துவத்தேவைப்பாடுகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக விதத்திலேயே காணப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

உண்மையில் கடந்த 2008 ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியவங்கியின் வசமிருந்த தங்கக்கையிருப்பின் பெறுமதியானது 92 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டபோதிலும், கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதியில் அது 893 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்திருந்தது. 

எனவே நிலவுகின்ற ஒதுக்கு முகாமைத்துவக்கொள்கைகளுக்கு ஏற்புடையவாறான தங்க இருப்புக்கொள்வனவு மற்றும் தங்கமாகப்பேணல் அல்லது திரவப்படுத்தல் ஆகியவற்றுக்கேற்ப ஒதுக்கில் உள்ள தங்க இருப்பின் பங்கு காலத்திற்குக்காலம் மாறுபடும் என்பது வெளிப்பட்டுள்ளது.

அதன்படி, 2021 ஆம் ஆண்டு டிசம்பர்மாத இறுதியில் மத்திய வங்கியின் தங்க இருப்பின் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டின் அடிப்படையில் அதன் பெறுமதி 175.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்திருப்பினும் ஒதுக்கு சொத்துப்பட்டியலின் உள்ளடக்கத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் பெறுமானங்களுக்கு வெளிநாட்டு ஒதுக்கு மட்டங்கள் உயர்வடையும்போது தங்கத்தின் இருப்பை அதிகரிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *