• Fri. Oct 17th, 2025

உள்ளூராட்சிசபைகளின் பதவிக் காலத்தை நீடித்தமை ஜனநாயக விரோதமானது – டில்வின் சில்வா

Byadmin

Jan 11, 2022

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும். மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி சபைகளின் பதவி காலத்தை நீடிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதற்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. எனவே இதற்கான உண்மை காரணம் குறித்து தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம்.

இதற்கு அரசாங்கத்தினால் கொவிட் தொற்றினைக் காரணம் காட்ட முடியாது. காரணம் பாடசாலைகள் கூட முழுமையாக திறக்கப்பட்டு நாடு முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது. அரசாங்கம் உண்மையான காரணத்தைக் கூறாவிட்டாலும் நாம் அதனை அறிவோம்.

அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. எனவே தேர்தலை அறிவித்து வாக்குகளைக் கேட்பதற்காக மக்களிடம் செல்ல முடியாது. 2019 இல் இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது காணப்பட்ட மக்கள் ஆணை இன்று இல்லை. அது முழுமையாகக் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் படுதோல்வியடைவோம் என்பதை அரசாங்கம் நன்றாக உணர்ந்துள்ளது. அது மாத்திரமின்றி அரசாங்கத்திற்குள்ளும் உள்ளக பிரச்சினைகள் பல உள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் வலுத்துள்ளன.

எனவே அரசாங்கம் இழந்துள்ள அதிகாரத்தை உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலத்தை நீடித்து பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடாகும். தற்போது தேர்தலை நடத்தியிருந்தால் உண்மை நிலைவரம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *