திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் மார்க்க சட்டதிட்டங்கள்பற்றிய அறிவைப் பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும்மொழிகளிலும் அதி திறமையாக விளங்கிய இவர், சட்டக்கல்வியிலும் சிறந்து விளங்கினார். அவர்தான் அறிஞர் சித்திலெப்பை ஆவார்.
அரேபிய நாட்டிலிருந்து வணிக நோக்கத்தில் இலங்கைக்கு பொருள் தேடி வந்த முல்க் ரஹ்மத்துல்லாஹ் பார்பரன் முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களில் ஒன்றான அளுத்கம எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட அவருக்கு முஹம்மது லெப்பை எனும் மகன் பிறந்தார். அவரும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடாத்தினார். இவர் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்க மன்னன் கண்டி ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த காலத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்து அங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 1838 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் திகதி கண்டியில் பிறந்த ஆண் மகன்தான் அறிஞர் சித்திலெப்பை ஆவார்.
1862 இல் கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நியமனம் பெற்ற அறிஞர் சித்திலெப்பை, 1864 இல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். இக்காலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணி புரிந்தார். இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகரசபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகரசபை உறுப்பினராகவும் பணி புரிந்துள்ளார்.
1882 டிசம்பர் 21 ஆம் திகதி “முஸ்லிம் நேசன்” என்ற பெயரில் அரபு, தமிழ் வார இதழொன்றை ஆரம்பித்து முஸ்லிம் சமுதாயத்தை கல்வி ரீதியாக மேம்படச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதில் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தாம் ஆற்றவிருந்த தொண்டுகள் பற்றி விளக்கினார். தவிர இலங்கை முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி உரத்துக் கூறும் பத்திரிகையாகவும் அது இருந்தது.
அறிஞர் சித்திலெப்பை சட்டத் தொழிலையும் கண்டி மாநகரசபை உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு தனது பிற்கால வாழ்க்கை முழுவதையும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும் ஒதுக்கினார். இக்காலகட்டத்தில் ஒராபி பாஷா அவர்களுடன் சேர்ந்து சமூக பணிகளுக்கு உறுதுணை புரிந்தார்.
அறிஞர் சித்திலெப்பை அவர்கள் 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் “அசன்பேயின் சரித்திரம்” எனும் நூல் ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நூலாக இருந்தது. அறிஞர் சித்திலெப்பை அவர்கள் கொழும்பில் சாஹிரா கல்லூரியை தோற்றுவித்தார். கொழும்பிலும் பிற இடங்களிலும் முஸ்லிம் பாடசாலைகளை நிறுவுவதில் பெரும் வெற்றி ஈட்டினார்.
இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டி வன்மையாக போராடியதன் மூலம் 1889 இல் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக இருவர் நியமன உறுப்பினர்களாக அங்கத்துவம் பெற்றனர்.
அறிஞர் சித்திலெப்பை பெரும்பாலும் தனது போராட்டங்களை தனிநபராகவே எடுத்துச் சென்றார். அந்நிய ஆட்சி முறை மாற்றங்களால் இலங்கையில் முஸ்லிம்கள் நவீன கல்வி, நவீனத்துவம், பொருளாதாரம், நாகரிகம், நவீன அரசியல் போன்ற பல விடயங்களில் முன்னேற்றமின்மை காரணமாக ஒரு பாரிய பிரச்சினை உருவெடுத்தது. இக்காலகட்டத்தில் எதிர்காலத்திற்கான மாற்று திட்டங்களையும் காலத்திற்கு ஏற்ற விதமான சீர்திருத்தங்களையும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தார்.
அறிஞர் சித்திலெப்பை இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முஸ்லிம்கள் சார்பாக பங்களிப்பு செய்தவர்களில் ஒரு முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வந்த குடும்பப் பின்னணியில் வந்த அறிஞர் சித்திலெப்பை நினைத்திருந்தால் கண்டியில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற பெயரைப் பெற்றிருக்க முடியும். மாறாக, அறிஞர் சித்திலெப்பையின் முழு எண்ணங்களும் சமூக மேம்பாட்டுக்காகவே இருந்தன. முஸ்லிம் சமூகத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் அதற்கான போராட்டங்களை சாத்வீகமான முறையில் முன்னெடுப்பதிலும் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்தது. அவ்வாறே செல்வத்தின் பெரும் பகுதியை தனது இலட்சியங்களுக்காகவும் சமூக முன்னேற்றதிற்காகவும் எவ்வித தயக்கமுமின்றி செலவு செய்தார்.
அறிஞர் சித்திலெப்பை 1898 பெப்ரவரி 5 இல் காலமானார். இவர் ஆசிய கண்டத்திலேயே ஓர் ஆச்சரியமான செயல் வீரர். இவரைப் போன்ற திறமைமிக்க சமுதாய சிந்தனையுள்ள சமூக தொண்டர்கள் தோன்ற வேண்டும்.