இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தினால் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த சனத்தொகையில் 95 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, 80 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தை மையப்படுத்தி நேற்றுமுன்தினம் காணொளி தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற உலகளாவிய தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்துவதற்கான உயர்மட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹிட் தலைமையில் இந்த விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளமைக்கு, இலங்கை சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொவிட் – 19 தொற்றுப் பரவலானது, அனைத்து நாடுகளுக்கும் பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சமத்துவமின்மையானது, ஆபத்துமிக்க புதிய திரிபுகள் ஏற்படுவதற்குள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
கடந்தாண்டு பொதுச் சபைக் கூட்டத்தின் போது நான் தெரிவித்ததைப் போன்று, அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதை உறுதிப்படுத்துதே தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்குள்ள சிறந்த வழியாகும்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது முதன்முறையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்த உடனேயே இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அது கொவிட் தொற்றால் ஏற்படக்கூடிய மரணங்களைத் தடுத்தல், நோய் நிலைமையைக் குறைத்தல் மற்றும் தொற்றுப் பரவலைக் குறைத்தல் போன்று பொதுப் பாதுகாப்பு இலக்குகளைப் பாதுகாத்துக்கொண்டு, சமூக மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளைப் பராமரிப்பதற்கான கொள்கைகளின் மீது எடுக்கப்பட்ட ஒரு படிமுறையாக விளங்கியது.
சுகாதார ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பெரியவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையிலேயே நாம் எமது தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தோம். இது ஆபத்து அடிப்படையிலான அணுகுமுறையின் கீழ் பின்பற்றப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்குள் 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் கொவிட் 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம். இதனால் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு இருந்த ஆர்வத்தை நாடு முழுவதிலும் காணக்கிடைத்தது.
இவ்வாண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை, தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய மொத்த சனத்தொகையில் 95 சதவீதமானோர் முதற்கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 80 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்த முழுமையான தடுப்பூசி ஏற்றலுக்கு உள்வாங்கப்பட்டவர்களில் 44 சதவீதமானோர், பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றியதால், தொற்றுப் பரவல் காரணமாக நாட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய அழிவு நிலைமையைக் கட்டுப்படுத்த முடிந்தது. நேரடியாகவோ அல்லது கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாகவோ தடுப்பூசிகளை வழங்கிய நாடுகளின் பெருந்தன்மைக்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இதனூடாக தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகளவில் தடுப்பூசிகளைப் பெற்று நாட்டுக்குத் தேவையான முழுமையான தடுப்பூசி ஏற்றலை முன்னெடுக்க வாய்ப்பு கிடைத்தது.
மனித குலத்தின் நன்மைக்காக, ஒட்டுமொத்த தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்த, அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென, அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.