கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப்அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று ஹிஜாப் சா்ச்சை விவகார வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி(பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட அமா்வு இன்று அளித்த தீர்ப்பில், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது நியாயமான கட்டுப்பாடுதான். பாடசாலைகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது. அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.