ரயில் போக்குவரத்து கட்டணங்கள் திருத்தப்பட வேண்டுமாயின், அது முறையான நடைமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவசர அவசரமாக ரயில் கட்டணங்களை திருத்த முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பஸ் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது போன்று ரயில் கட்டணங்களை திடீரென திருத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
“நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரயில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துதல் உசிதமாக அமையாது என்பதே எமது நிலைப்பாடு.
இலாபம் ஈட்டக்கூடிய பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து யோசனைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொடுத்துள்ளபோதிலும், அவை எதனையும் ரயில்வே திணைக்களம் நடைமுறைப்படுத்துவதில்லை.
பயணச் சீட்டு அதிகரிப்பதானது, ரயில் நிலைய அதிபரிகளின் ஊடாகவே பயணிகளுக்கு தெரியப்படுத்தப்படும். எனினும், தூரப் பயணம் மற்றும் நகரங்களுக்கிடையிலான பயணச் சீட்டுகான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எமக்கும் சிஸ்டத்தை (கணணியை) பார்த்தவுடன்தான் அறிய முடிந்திருந்தது” என்றார்.
ரயில்வே திணைக்கள ஆணையாளர், அவருக்கு தேவையான விதத்தில் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவதாக யில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம் சாடியிருந்தார்.
இந்நிலையில், ரயில் கட்டணத்தை திருத்துவது தொடர்பாக நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, கட்டண திருத்தம் அமுல்படுத்தப்படும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.