இலங்கை மின்சார சபை 10 மணித்தியாலங்கள் மின்விநியோக தடைக்கு அனுமதி கோரியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றவை.
நாளாந்தம் 3 மணித்தியாலங்களும்,20 நிமிடங்களும் மாத்திரமே மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பேர்டினான்டோ தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
டொலர் நெருக்கடி தீவிரமைந்துள்ள காரணத்தினால் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நாளாந்தம் 10 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது தடையின்றி கிடைக்கப்பெறுகின்றன.நீர்மின்னுற்பத்தியும் சீராக காணப்படுவதால் மின்விநியோக தடை அமுலினை 10 மணித்தியாலங்கள் அளவு நீடிக்க வேண்டிய தேவை கிடையாது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள ஒரு மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 18ஆம் திகதி அது வழமைக்கு திரும்பும்.
நாடுதழுவிய ரீதியில் சுழற்சி முறையில் தற்போது அமுல்படுத்தப்படும் 3.மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்விநியோக தடையை தொடர்ந்து நீடிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மின்விநியோக தடை அமுல்படுத்தும் காலத்தை குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதே தவிர நீடிக்க கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.