• Sat. Oct 11th, 2025

“நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட மாட்டேன்” – ஜனாதிபதி

Byadmin

Jul 11, 2017 ,

கடந்த கால கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதனால் அரிசியின் விலை உயர்வடைந்தாலும், சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை மேலும் அதிகரித்தால் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டாலும் அரிசியை இறக்குமதி செய்து சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல் பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரிசி விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும், அரசாங்கத்திலுள்ள பெரியவர்களுக்கு அது தெரிவதில்லை என தேசிய பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சாதாரண குடும்பத்திலிருந்து வந்த மக்களின் கவலை, வேதனைகளை புரிந்துகொள்ளக்கூடிய தலைவர் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் அந்த அனுபவத்துடனே மேற்கொள்வதாகவும், நாட்டு மக்களை ஒருபோதும் பட்டினி போட தான் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமூக, பொருளாதார, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், எந்த சவால் வந்தாலும் சம்பந்தப்பட்ட செயற்திட்டங்களை குறிக்கோளுடன் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொலன்னறுவை, பலுகஸ்தமன ஜனாதிபதி மாதிரி ஆரம்ப பாடசாலை ஜனாதிபதியால் இன்று (10) முற்பகல் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பாடசாலை உரிமையை வடமத்திய மாகாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களுக்கும் வழங்கி பிள்ளைகளுக்கு சமமான கல்வி செயற்பாட்டை வழங்குவது இன்று நாட்டில் இடம்பெறும் முக்கியமான நடவடிக்கை என்று ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

நினைவு பலகையை திரைநீக்கம் செய்து பலுகஸ்தமன ஜனாதிபதி மாதிரி ஆரம்ப பாடசாலையை மாணவர்களுக்கு உரித்தளித்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார். பாடசாலையின் இணையத்தளமும் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அதிபர் பிரியங்க சில்வா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *