• Wed. Oct 22nd, 2025

உணவுப் பாதுகாப்பு திட்டத்தை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

Byadmin

Sep 18, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பல்துறை கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டம் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் திட்டத்திற்குப் பொறுப்பான ஜனாதிபதி ஆலோசகர் சுரேன் படகொட தலைமையில் இணையவழி ஊடாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிராமிய மட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பல்துறை கூட்டுப் பொறிமுறையை அமுல்படுத்துதல் மற்றும் அதன்போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அடுத்த வாரத்திற்குள் வீடு வீடாகச் சென்று இது தொடர்பில் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்குமாறும், தேவைப்படின் இந்த தரவு சேகரிப்பை இணையத்தள (Online) தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய படகொட , உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதை முதன்மை இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் அமைப்பது தொடர்பான அடிப்படை பிரச்சினைகள், பயிர்களுக்கு போதிய உரம் இல்லாமை, விதைகள் தட்டுப்பாடு, விவசாய இயந்திரங்களின் இயக்கத்திற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை, பூச்சிகொல்லி பற்றாக்குறை, கால்நடைகளால் பயிர் சேதம் மற்றும் மேலதிக அறுவடைகளை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்கள், போன்ற பல்வேறு விவசாயப் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரம் மற்றும் பூச்சிகொல்லிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எரிபொருளுக்கான QR குறியீட்டின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சுரேன் படகொட சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி சுரேன் படகொட,

“கடந்த சிறு போகம் மற்றும் பெரும் போகத்தின் தோல்வியின் காரணமாக நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை காரணமாக சுமார் 60% மக்கள் உணவு உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உணவு வழங்குவது, எங்களின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

யாரும் பட்டினியால் வாடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி எங்களை அறிவுறுத்தியுள்ளார். எனவே, சமூக சமையலறை என்ற திட்டத்தின் மூலம் உணவு இல்லாதோருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வீட்டு அலகுகளை வலுப்படுத்தவும், எதிர்வரும் பெரும் போகத்தில் பயிர்ச்செய்கைத் திட்டங்களை செயல்படுத்த தரவுகளை சேகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு வழங்க முடியும். நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படுவதற்கு ஒரு வகையில் அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டும். அரச அதிகாரிகளாகிய நாமும் இதில் தலையிட வேண்டும். இந்த பொருளாதார மையத்தின் ஊடாக உணவு மற்றும் பயிர்ச்செய்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்களான எல்.பி. ஜயம்பதி, கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குக் குழுவின் பணிப்பாளர்களான யசந்தா முனசிங்க, பி.எம்.எஸ். ஜயதிலக உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *