• Sun. Oct 12th, 2025

இலங்கையிலுள்ள ரோஹிங்கியா அகதிகளை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது ஐ.நா. அமைப்பு

Byadmin

Aug 13, 2017

இலங்கையில் உள்ள மிரிஹான சட்ட விரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இன்று தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டது.

இலங்கையில் பிறந்த குழந்தை உள்ளிட்ட 32 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், மிரிஹான சட்டவிரோத குடியேற்றக்காரர் தடுப்பு முகாமில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் குடிவரவு குடியகல்வு தினைக்கள அதிகாரிகள், அந்த அகதிகளை ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, 32 அகதிகளும் கொழும்பு அருகே உள்ள கல்கிசை பகுதியில் தனி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும் ஆர்.ஆர்.ரி நிறுவனத்தின் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்டின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது தொடர்பான உடன்பாடு ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இலங்கை அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அந்த அகதிகளுக்கு வேறொரு நாட்டில் அரசியல் புகலிடம் கிடைக்கக் கூடிய முயற்சியில் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தற்போது ஈடுபட்டுள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கையில் தங்களுக்கு ஐ. நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மூலம் அரசியல் புகலிடம் கிடைக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.

ஆனால், ஐ.நா அகதிகளுக்கான கொள்கை பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திடாததால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்நிலையில் அகதிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவர்களைத்தனி இடத்தில் வைத்துப் பராமரிக்கும் விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

இதையடுத்து, குடிவரவு குடியகல்வு தினைக்களம் மூலம் நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கோரி முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை கடந்த செவ்வாய்கிழமை ஏற்றுக் கொண்ட மல்லாகம் நீதிமன்றம், 32 பேரையும் கொழும்பில் உள்ள ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளிடம் ஓப்படைக்குமாறு உத்தரவிட்டது.

மியன்மார் நாட்டில் பிறந்த அகதிகள், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறி இந்திய தலைநகர் டெல்லியிலும் பிறகு தமிழ் நாட்டிலும் சில காலம் தங்கியிருந்தனர். .

இந்நிலையில் இந்தியாவில் இருந்து படகு மூலம் வேறொரு நாட்டில் அகதியாக தஞ்சம் அடைய சென்று கொண்டிருந்த வேளையில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அதன் பிறகு மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரிலே மிரிஹான தடுப்பு முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

 

-BBC –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *