முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு சற்றுமுன்னர் வந்தனர்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்கே, இவ்விருவரும் அழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு, இவ்விருவரும் ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், திடீரென சுகயீனமடைந்தமையால், விசாரணைக்கு ஆஜராகமுடியாமல் போய்விட்டதாக, அவ்விருவரும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடைய நபர், ஷிரந்தி ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட, டிபென்டர் ரக வாகனத்தையே பயன்படுத்தியதாக, ஷிரந்திக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீன், 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டிய சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் காரொன்றுக்குள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க, ஒரு வருடத்துக்கும் மேலான காலத்துக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஜூன் 6ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.