• Sat. Oct 11th, 2025

சுயநலன்களுக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்

Byadmin

Sep 12, 2017

ஜகத் ஜெயசூரியவுக்கு எதிராக யுத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தான் சாட்சியளிக்க தயாராகவுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதானது இலங்கை நாட்டின் இராணுவத்தை தங்களது சொந்த நலனுக்காக சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் செயல் எனவும் இவ்வாறான மன நிலை கொண்டவர்கள் இலங்கை நாட்டில் ஆட்சியில் நிலைத்தால் இலங்கை நாடானது மிகவும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

தற்போதைய இலங்கை அரசானது இராணுவனத்தை சர்வதேசத்தின் முன் சிரம் தாழ்த்த முயற்சிப்பதாக நாம் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். சிலர் நாம் ஆட்சியை கவிழ்க்க இதனை செய்கிறோமா என சிந்தித்தனர். இன்று முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா ஜகாத் ஜெயசூரியவுக்கு எதிராக யுத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயார் என கூரியுள்ளமையின் மூலம் அது மிகவும் துல்லியமாக வெளிப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அரசுக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். நாம் இராணுவ தளபதிகளை சர்வதேசத்தின் முன் கைகட்ட வைப்பதை ஒரு போதும் விரும்பவில்லை. அவர்கள் ஏதேனும் பிழைகள் செய்தால் அதனை எமது நாட்டுக்குள் தீர்க்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்தோம். இது போன்று தற்போதைய அரசுக்கும் நிச்சயம் ஒரு கொள்கை இருக்கும்.

அந்த கொள்கை இவ்வரசின் பிரதானமானவர்களில் ஒருவராக உள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன் சேகாவுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். அவர் இவ் அரசின் கொள்கை இராணுவ தளபதிகளை சர்வதேசத்தின் முன் கைகட்ட வைப்பதல்ல என்றிருந்தால் நிச்சயமாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இந்த கருத்தை கூறியிருக்க மாட்டார்.

ஒரு அரசானது யுத்த விதிகளை மீறி செயற்பட்டால் அதற்கு இராணுவ தளபதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. இவர் ஜெனரல் ஜகாத் ஜெயசூரிய மீது யுத்த குற்றச் சாட்டுக்களை முன் வைக்கும் காலப்பகுதியில், இவர் தான் இராணுவ தளபதியாக இருந்தார். இவர் நினைத்திருந்தால் அதற்கு எதிராக யார் சொன்னாலும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அப்படி அல்லாமல் ஆதாரம் சேர்த்ததன் மர்மம் தான் புரியவில்லை.

இவரது குற்றச் சாட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் உத்தரவின் பெயரிலேயே இது நடைபெற்றுள்ளதாக கூறுகிறார். இவர் எங்கே? எந்த நோக்கத்தோடு வருகிறார் என்பதை இதன் மூலமே அறிந்து கொள்ளலாம்.

அங்கு நடைபெற்ற யுத்த சாட்டுக்களின் பின்னால் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளார் என்பதன் மூலம் யுத்த விடயங்கள் அனைத்தும் கோத்தபாய ராஜபக்ஸ போன்ற உயர் மட்ட அரசியல் வாதிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை இவர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், யுத்தத்தை வென்றது நானே என தம்பட்டமும் அடிக்கின்றார்.

இது எந்த வகையில் நியாயமாகும்? இவர் முன் வைக்கும் குற்றச் சாட்டு உண்மையாக இருக்குமாக இருந்தால் இவர் டம்மி தளபதியாக இருந்துள்ளார் இவர் வாயாலேயே ஒப்புக்கொள்வாதாகிவிடும். எது எவ்வாறு இருந்தாலும் எங்கள் மீது கொண்ட கோபத்தால் இலங்கை நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் பாதகமான செயலை செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

-ஊடகப்பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *