உலகம் முழுவதும் மக்கள்தொகை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்களாக உருமாறி வருகின்றன. கட்டுமானத்துக்கு தேவையான கற்கள், கண்ணாடி, சிமெண்ட் கலவை ஆகியவற்றுடன் மணல் சேர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால் தங்கத்துக்கு நிகராக மணலின் விலையும் நாளொரு மாற்றம் – பொழுதொரு ஏற்றமாக உயர்ந்துகொண்டே போகிறது.
அந்த வகையில், நகரமயமாதலும், கட்டுமானப் பணிகளும், மணலுக்கான தேவையும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாய் உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டு கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.
மிகப்பரவலான பாலைவனப் பகுதிகள் நிறைந்த அரபு நாடுகள் மணலை ஏன் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும்? என சிலருக்கு எழும் சந்தேகம் நியாமானதுதான். ஆனால், அந்த பாலைவனங்களில் உள்ள மணல் அனைத்தும் மிருதுவாக உள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை.
எனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் சுமார் 456 பில்லியன் டாலர்கள் அளவிலான மணல், கற்கள் மற்றும் சரளைக்கற்களை தங்கள் நாட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கடந்த 2014-ம் ஆண்டு இறக்குமதி செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
எங்கிருந்து எந்த நாடு ஏற்றுமதி செய்தாலும், இறக்குமதி செய்தாலும் உலகில் மிக வேகமாக கரைந்துக் காணாமல்போய், விரைவில் தீர்ந்துப்போகும் அபாயகரமான இயற்கை வளங்களின் பட்டியலில் தற்போது மணலும் முக்கிய இடம்பிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.