• Mon. Oct 13th, 2025

நாங்கள் அமைதியை விரும்புகிறோம்!

Byadmin

Sep 13, 2017

மியான்மரின் ரக்கினே மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான ரஷீடா ஒன்பது நாட்களுக்கு முன்பு அங்கிருந்து தப்பி வங்கதேசம் வந்தார். அல்ஜசீராவின் நிருபரான கேத்தி அர்னால்டிடம் அவர் கூறியதாவது:

என் பெயர் ரஷீடா. எனக்கு 25 வயதாகிறது. அரகான் புரட்சிக்கு முன் நான் மிகவும் அமைதியான எளிய வாழ்க்கையை நடத்தி வந்தேன். எங்களுக்கு இருந்த துண்டு நெல் வயலில் பயிரிட்டு வந்தோம். என் கணவருடனும் மூன்று பிள்ளைகளுடனும் வாழ எனக்கு ஒரு வீடு இருந்தது. அந்த வாழ்க்கை அமைதியாக இருந்தது மேலும் இந்த நெருக்கடி வரும் வரை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

இப்போது நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். எங்களுடைய வீடுகளும் வயல்களும் எரிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களால் இனி அங்கே வாழவே முடியாது.

எங்கள் கிராமத்தில் இராணுவம் துப்பாக்கிச்சூட்டைத் தொடங்கியதும் உடனடியாக எங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டில் மறைந்து விட்டோம். அந்த காட்டின் ஆபத்துக்களை கண்டு அவர்கள் அஞ்சினார்கள். ஆனால் வீட்டிற்கு நான் திரும்பிய போது, என் கண் முன்னே பலர் கொல்லப்பட்டு கிடந்தனர்.

காட்டிலிருந்து எட்டு நாட்களாக நடந்தே கடைசியில் எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம். மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் இலைகளைத் தவிர சாப்பிட எதுவுமில்லை. தொடர்ந்து குழந்தைகள் உணவு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்னுடைய மூன்று குழந்தைகளைத் தவிர எங்களால் எதையுமே எடுத்து வர முடியவில்லை.

நாங்கள் ஒரு சிறிய படகில் எல்லையைக் கடந்தோம். அது மிகவும் ஆபத்தானது என்று உணர்ந்தேன். அது மூழ்கப்போகிறது என்று நினைத்ததால் நான் என் குழந்தைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டேன்.

வங்கதேசத்தில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. எங்களுக்கென்று சொந்தமாக கால்நடைகள், ஒரு ஏக்கர் நெல் வயல் மற்றும் ஒரு வீடு இருந்தது. சொந்த நாட்டில் எங்களுக்கு ஒரு நல்ல கிராமம் இருந்தது. எல்லாவற்றையும் நாங்கள் இழந்துவிட்டோம். இதனால் நாங்கள் எவ்வளவு துக்கமாக இருக்கிறோம் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் எங்கள் வீட்டை இழந்து வாடுகிறோம். இங்கே நம்பிக்கையற்றவர்களாக உணர்கிறோம். எங்களது எதிர்காலத்தைப் பற்றி எனக்கு இப்போது எதுவும் தெரியவில்லை.

எங்களுக்கு இங்கே போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. வங்கதேச மக்கள் மிகவும் அன்பானவர்கள். ஆடைகளையும் உணவுகளையும் கொடுத்து உதவுகிறார்கள். ஆனால் நான் எந்த சர்வதேச அமைப்புகளையும் இங்கே பார்க்கவில்லை. அவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன் – எங்களுக்கு சாப்பிட உணவு வேண்டும்.

வெளி உலகிற்கு என்னுடைய செய்தி : நாங்கள் அமைதியை விரும்புகிறோம். சமரசமன்றி எங்களுக்கு எதிர்காலம் ஒன்றுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *