• Sat. Oct 11th, 2025

ஒரே ஒரு பயணமும்! சீரழியும் குடும்பங்களும்!

Byadmin

Sep 22, 2017
குடும்பம் என்பது ஒரு வலுவான சமூகக் கட்டமைப்பின் அங்கமாகும், இந்நிலையில் ஒரு சமூகத்தினுடைய பாரிய அடித்தளமே ஒரு குடும்பத்தின் கட்டமைப்பு, பண்புகள் மற்றும் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது.

இன்றைய இயந்திர உலகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு அந்த குடும்பத்தினர் எந்தளவில் பங்களிப்புச் செய்கின்றனர் என்பது எம் மத்தியில் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்!

பணம், பொருளாதார வளர்ச்சி, சமூகத்தில் தனக்கென்ற ஒரு தனி அந்தஸ்து என்று அனைவரும் சிந்திக்கும் பட்சத்தில் சிலர் நிலை தடுமாறும் நிலையும் எம்மவர்களிடையே பரவலாக காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறு அண்மையில் கேள்வியுற்ற ஒரு சில சம்பவங்கள் பல கேள்விகளை தோற்றுவித்துள்ளதோடு ஒரு சமூகத்தின் பின்னடைவை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதற்கு முனைகின்றது.

தமது குடும்பத்தின் வறுமையை போக்கவும், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தவும் பெற்றோர்கள் பல்வேறான தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இவற்றுள் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு எம்மவரிடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. குறிப்பாக எமது சமூகத்தினரிடையே இந்த நடைமுறை பரவலாகக் காணப்படுகின்றது.

வருமானம் இன்மை காரணமாக பெற்றோர்கள் அநேகமானோர் வெளிநாட்டுத் தொழிலை நாடிச் செல்கின்றனர், அதிலும் குறிப்பாக பெண்கள், தாய்மார்கள் வெளிநாட்டுத் தொழிலை நாடிச்செல்வது வழக்கமாகவே மாறிவிட்டது.

இவ்வாறான வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்களினால் எம்மவர்கள் இழந்தது அதிகமா அல்லது பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்கள் அதிகமா என நோக்குமிடத்து இழந்ததுதான் அதிகம் என்பதை மறுக்க முடியுமோ?

உதாரணத்திற்கு இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக் அவரை குறிப்பிட முடியும். பணிப்பெண்ணாகச் சென்று அங்கு மனிதக் கொலை புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டில் மரண தண்டனைக்கு அவர் உட்படுத்தப்பட்டதை யாராலும் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது.

இவ்வாறு நாம் கேள்வியுற்றவைகள் இன்னும் பல. அண்மையில் மலையத்தைச் சேர்ந்த ஒரு தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாகச் சென்றிருந்து திரும்பியிருந்த நிலையில் அவரை நாம் சந்திக்க நேர்ந்தது.

எண்ணற்ற கனவுகளுடனும், பல எதிர்ப்பார்ப்புக்களுடனும் அந்த தாய் நாட்டிற்கு திரும்பியிருந்தார். ஆனால் ஆசையுடன் தனது வீட்டை நோக்கி பயணித்த அந்த தாய்க்கு அவரது வீட்டில் பேரதிர்ச்சி காத்திருந்ததை அவர் சற்றும் எண்ணியிருக்கவில்லை.

தனது மூன்று பிள்ளைகளை தனது கணவனை நம்பி விட்டுச் சென்ற நிலையில் அவர் திரும்பி வந்து பார்க்கும்போது தனது மூன்று பிள்ளைகளில் ஒருவர் கூட தன்வசம் இல்லாமல் தனது கணவன் கைவிட்டுவிட்டதை அறிந்து நொருங்கித்தான் போனார் அந்தத் தாய்.

வெளிநாட்டுக்குச் செல்லும் முன்னர் தனக்கென்று இருந்த வீட்டினையும், வீட்டினைச் சுற்றி இருந்த வளவினையும் அந்த கணவன் அதே தோட்டத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு விற்றுத்தீர்த்திருந்தார்.

குறித்த தாயின் ஒரு மகனும், ஒரு மகளும் உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்திருக்க தாயின் 16 வயதையுடைய மூத்த மகன் நகர்ப்புறத்தில் உணவகம் ஒன்றில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

குடும்பத்தின் வறுமையை போக்க வெளிநாட்டை நாடிச் சென்ற அந்த தாய்க்கு கிடைத்த துயரப் பரிசுகள்தான் அதிகம்.

இவ்வாறான துயரங்கள் குறித்த சமூகத்தில் இடம்பெற காரணங்கள்தான் என்ன? ஒரு பயணத்தால் ஒரு குடும்பம் சீரழியும் எனில் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகள்தான் என்ன? இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான் யார்?

இதற்கு காரணம் எனும்போது உடனே எமது மனதில் தோன்றுவது வறுமை, உண்மையில் அது பிரதான காரணமும் கூடத்தான்.

சிலர் தமது வாழ்வாதாரத்தினை உயர்த்திக்கொள்ளவும், வசதியான வாழ்க்கைக்காகவும்கூட செல்பவர்கள் உண்டு. சொந்த ஊரில் கிடைக்காத சொர்க்கங்கள் வெளிநாடுகளில் சென்று தனது உறவுகளை மறந்து, தனது கலாச்சாரம் மற்றும் தனது சமூகம் என்பவற்றை இழந்து தொழில் புரிந்து சம்பாதித்தால்தான் கிடைக்கும் எனில் நிச்சயம் அது நிரந்தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழ வாய்ப்புண்டு.

ஒரு பயணத்தினால் ஒரு குடும்பம் சீரழிகின்றது எனில் அந்த பயணம் அந்த குடும்பத்தில் மட்டும் அல்ல அந்த சமூகத்திலும்கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது என்பதில் ஐயமில்லை..!

-ஜெஸ்லின்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *