வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம்
கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஜனவரிக்கு பின்னரும் காலம் தாழ்த்தக்கூடாது என அனைத்து தரப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தேர்தல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது அனைத்து தரப்பினர்களும் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக தாமதப்பட்டு வந்த உள்ளூ ராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக தேர்தல்கள் ஆணைக்குழு வேட்புமனு கோரல் மற்றும் தேர்தல் நடத்தப்படுவதற்கான திகதியை அறிவிக்கவுள்ளது. கட்சித்தலைவர்களின் கலந்துரையாடலில் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் ஏற்பட்ட திகதியையே தேர்தல்கள் ஆணைக்குழு பெரும்பாலும் தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவர் தினேஷ் குணவர்த்தன எம்.பி கடந்த வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வு நடைபெற்றபோது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுவது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன்போது நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டங்களில் சிங்கள, ஆங்கில மொழிகளில் காணப்படும் சில வேறுபாடுகளின் காரணமாக வர்த்தமானி அறிவித்தல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் அவற்றில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பதோடு அதற்காக சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்பகமுவ பிரதேச சபைகளை பிரிப்பது போன்ற சில விடங்கள் நிறைவேற்றவேண்டியுள்ளதாகவும் எவ்வாறாயினும் இவ்விடயம் குறித்து கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
அதற்கமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் கட்சித்தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம், அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், அமைச்சர் ப.திகாம்பரம், மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டப்பு பங்கேற்றிருக்கவில்லை என்பதோடு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கான வலியுறுத்து
இவ்வாறான நிலையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஜனவரிக்கு பின்னரும் காலம்தாழ்த்தக்கூடாது என அனைத்து தரப்பினர்களாலும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தேர்தல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது அனைத்து தரப்பினர்களும் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆகவே அதில் காணப்படும் தாமதங்களை உடனடியாக நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.
சட்டமா அதிபர் மீது சாடல்
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதும் சிங்கள, ஆங்கில மொழிகளில் சில வேறுபாடுகள் காணப்படுவதால் அவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளதோடு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கட்சிப்பிரதிநிதிகள், சட்ட மா அதிபர் தரப்பில் பலத்த தாமதங்கள் நிலவுகின்றன. குறிப்பாக அத்திணைக்களத்தின் செயற்பாடுகள் நத்தை வேகத்திலேயே செல்கின்றன என்ற தொனியிலான கருத்துக்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
துரிதமாக மேற்கொள்ள வேண்டும்
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச்சட்டங்களில் காணப்படும் சிறு திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்குரிய அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்குரிய முதற்கட்ட தயார்படுத்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளமையையும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்புக்கு தொலைபேசி அழைப்பு
இதனையடுத்து நடைபெற்ற கலந்துரையாடல்களில் தேர்தலை ஜனவரி மாதம் எத்தகைய காலப்பகுதியில் வைப்பது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலில் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதெனவும் அதற்கு முன்னதாக சட்டரீதியான மற்றும் ஏனைய விடயங்களை முன்னெடுத்து விரைந்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது என்று அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 20ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதில் தங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றதா? ஏன வினவியுள்ளார்.
தொலைபேசி உரையாடலின் பின்னர் கட்சி தலைவர்களிடத்தில் பிரதமர் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்திகதியில் தேர்தலை நடத்துவதற்கு எவ்விதமான எதிர்ப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. அவர்களும் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர் என்றார்.
ஈற்றில் இறுதியான ஜனவரி 27
இவ்வாறான நிலையில் தொடர்ச்சியான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனடிப்படையில் ஜனவரி மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதனையும் பார்க்கில் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அதாவது 27ஆம் திகதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாக அமையும் என்ற யோசனை கூட்டத்தில் இருந்தவர்களால் முன்மொழியப்படவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைஸர், பிரதமர் ரணில் உட்பட அனைத்து தரப்பினரும் அத்திகதியில் தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் வெளியிட்டனர்.
இதனையடுத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக திருத்தச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை அம்பகமுவ தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளன. அது தொடர்பிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல
தெரிவிக்கையில்,
ஜனவரி இறுதி வாரத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி மீது வீணான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். ஐ.தே.க என்றுமே தேர்தலுக்கு அஞ்சவில்லை. எந்நேரத்திலும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்றார்.
இதேவேளை, ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி,
வடமாகாணத்தில் மருதங்கேணி, கண்டாவளை, ஒட்டிசுட்டான், மடு இந்த நான்கு பிரதேசங்களும் மிகப் பெரியவை மற்றும் மிகவும் பின்தங்கியவையாகும். இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மானிப்பாய், சுன்னாகம். சங்கானை, நெல்லியடி ஆகியவற்றுக்கான நகர சபைகள் உருவாக்கப்படவேண்டும்.
கிளிநொச்சி ஒரு மிகவும் பெரிய நகரர்கும். இது சுமார் 4 கி.மீ. தூரம் பரந்தன் முதல் முறிகண்டிவரை பரந்து உள்ளது. இது கரைச்சி பிரதேச சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சபையால் கிளிநொச்சி நகரத்தின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் உள்ளது.
கரைச்சி பிரதேச சபை கண்டாவளை பிரதேச செயலகத்தையும் நிர்வகிக்கவேண்டி உள்ளது. உங்களுக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். அதாவது 1991ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சி நகர சபையாகவே இயங்கி வந்தது. மேலும் கிளிநொச்சி நகர்தான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிர்வாக நகர். இது விவசாய, வர்த்தக, நிதி மற்றும் கல்வித் துறைகளுக்கு வடமாகாணத்தில் உள்ள ஒரு மையமாகும்.
முல்லைத்தீவு நகரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக நகராகும். இதுவும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்தை அனுபவித்தது. இதே போல் மானிப்பாய், சுன்னாகம், சங்கானை, நெல்லியடி நகர்களும் 1991ஆம் ஆண்டிற்கு முன்னர் நகரசபை அந்தஸ்தைக் கொண்டிருந்தன.
இவை யாவும் இன்று நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. இங்கெல்லாம் நகர சபை நிர்வாகம் அமையாததால் நகரங்களின் தேவைகளும் சேவைகளும் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றன. எனவே இங்கு மேலே கூறப்பட்ட பிரதேச சபைகளை வரவுள்ள தேர்தலுக்கு முன் தரம் உயர்த்தி நகர சபைகளாக மேம்படுத்த வேண்டும்.
யாழ். நகரமே வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு மாநகர சபையாகும். ஆதலால் இத்தருணத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவரும் வவுனியா நகரை மாநகர சபையாக தரம் உயர்த்த வேண்டுகின்றேன். இத் தரமுயர்த்தல் இந் நகரை மேலும் வளர்ச்சியடையச் செய்யும். அங்குள்ள மக்களும் மிக உயர்ந்த சேவைகளைப் பெறமுடியும்.
கிழக்கு மாகாணத்தில் மாகாணத் தலைநகரான திருகோணமலையை மாநகர சபையாகத் தரம் உயர்த்துவதோடு செங்கலடி, களவாஞ்சிக்குடி, மூதூர், கிண்ணியா போன்ற பிரதேச சபைகளும் நகர சபைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று-மத்தி, கோரளைப்பற்று (வாழைச் சேனை), ஆகிய பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இங்கே பிரதேச சபைகள் இன்மையால் உள்ளூராட்சி சேவைகள் மிகவும் முடங்கிக் காணப்படுகின்றன.
கல்முனை நகரில் சாய்ந்தமருது பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேளையில் அங்குள்ள தமிழ்ப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்தத் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் துன்பங்களும் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் உள்ளன.
தெற்கில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்தைப் பிரதேச சபையாக்குமாறும் மற்றும் அக்குரஸ்ஸ, தெனியாய, ஹக்மன போன்ற நகர்களை நகர சபையாக்க வேண்டும்.
உள்ளூராட்சி சபைகள் உருவாக்கம், தரமுயர்த்தல் சம்பந்தமாக ஐம்பதிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் முடிவு காணப்படாமல் நீண்ட காலமாகத் உள்ளூராட்சி அமைச்சிடம் உள்ளதாக அறிகின்றேன்.
அண்மையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் உள்ளூராட்சி சபைகள் அமைக்கவும், தரம் உயர்த்தவும் தகுதிகள் யாவை என வரையறுத்துள்ளதாக அறிகிறேன். ஆனால், இக் குழு மிகவும் பின்தங்கிய, மக்கள் அடர்த்தி குன்றிய பிரதேசங்களான வடமத்திய மாகாணம், வடமாகாணம், கிழக்கு மாகாணம், ஊவா மாகாணம் போன்றவற்றின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தவறியுள்ளது.
இக்குழுவில் சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவம் எதுவும் கிடையாது. இவர்களின் பரிந்துரைகள் மேற்கூறப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. ஆகவே இவை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு இதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை தாமதப்படுத்தாது கொள்கையளவிலான இணக்கப்பாட்டை வெளியிடவேண்டும் என்பதோடு இக்கோரிக்கைகளை காலவோட்டத்தில் படிப்படியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன் எனக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.